பிரதமராக மஹிந்த சத்தியப்பிரமாணம்

கடமைகளையும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்

இலங்கையின் ​23ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் சுபவேளையான 1.10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் மஹிந்த ராஜபக்‌ஷ புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து சுபவேளையான பி.ப 4.15 மணிக்கு கொள்ளுப்பிட்டியிலமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் புதிய பிரதமர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந் நிகழ்வு மிக எளிமையாக நடைபெற்றதுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், பிரதமரின் குடும்ப உறவினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிற்பகல் 1.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் தேசிய கீதத்துடன் சத்தியப் பிரமாண நிகழ்வு ஆரம்பமானது. அதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷ அவரது பாரியாருடன் நிகழ்வுக்கு வருகை தந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகையுடன் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பமானது.

சத்தியப் பிரமாணம் தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்ததையடுத்து மீண்டும் ஜனாதிபதியினால் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அந்த ஆவணம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பி.ப. 4 மணியளவில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் புதிய பிரதமர் வருகை தந்தார்.

அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்கள் கரகோசத்துடன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மத வழிபாடுகளை தொடர்ந்து தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றிபெற்றது. அதனையடுத்து நாட்டின் 7ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 18ஆம் திகதி பதவியேற்றார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்றிருந்த நிலையில் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திலிருந்து அமைச்சர்கள் பலரும் தமது பதவிகளை இராஜனாமாச் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது பதவியை இராஜனாமா செய்தார். அதனையடுத்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காபந்து அரசாங்கமொன்றை அமைக்கும் தீர்மானத்தை மேற்கொண்டார்.

அதற்கிணங்க கடந்த அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாட்டின் 23ஆவது பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 11/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை