அங்குலம் காணியாவது விற்றதாக முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள்

 ராஜபக்‌ஷவினருக்கு அமைச்சர் சம்பிக்க சவால்

 எமது ஆட்சியில் ஒரு அங்குலம் நிலமாவது வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிரூபிக்குமாறு ராஜபக்‌ஷவினருக்கு சவால்விடுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இராணுவத்திற்கு சொந்தமான பெறுமதிமிக்க காணியை வெளிநா ட்டவருக்கு குறைந்த விலைக்கு விற்றது தொடர்பில் பதில் வழங்காமல் மக்களிடம் வாக்கு கோர கோட்டாபயவிற்கு உரிமை இல்லை என்று கூறிய அவர், திருடர் கும்பலுக்கு எதிராக மக்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி சரியான தீர்ப்புவழங்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கோட்டை சோலிஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், தான் பல பில்லியன் டொலர் திருடியதாக நிரூபித்தால் கழுத்தை வெட்டிக் கொள்வதாக 2016 ஜூன் மாதம் மஹிந்த ராஜபக்‌ஷ சவால் விட்டிருந்தார். தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் அரசியல் பலிவாங்கல் என அதனை சமாளிப்பார்கள்.

சங்கரில்லா ஹோட்டலுக்கு அரச காணியை கேள்வி மனு கோராது வழங்கினார்கள். இந்த காணியை 2010 டிசம்பர் 28 இல் வழங்கினாலும் மறுநாள் தான் சிங்கப்பூரில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கோட்டபய தலைவராக இருந்த மிஹின் லங்காவின் உப நிறுவனமான டீ.பீ.எல் நிறுவனமும் சங்கரில்லாவின் உப நிறுவனமான ஹெலியட்டும் இவ்வாறு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தினூடாக 5 மில்லியன் டொலர் ராஜபக்ஷவினருக்கு கிடைத்தது.

இராணுவ தலைமையகம் 8250 மில்லியனுக்கு வழங்கினார்கள்.அந்தப் பணத்திலே புதிய தலைமையகம் அமைப்பதாக கூறினாலும் 64 ஆயிரம் மில்லியன் இதற்கு செலவாகியுள்ளது. கட்டடக் கலைஞரான முதித ஜெயகொடி என்பவருக்கு இதில் ஒரு வீதம் வழங்கப்பட்டுள்ளது.இவர் தான் பெசிலின் மல்வானை மாளிகையையும் அமைத்தார்.இராணுவ முகாம் பணத்தில் தான் இது கட்டப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.இந்த நாட்டு படையினர் முன்பாக மண்டியிட்டு கோட்டாபய மன்னிப்பு கோர வேண்டும்.

அரச காணிகளை விற்று பிழைத்தவர்கள் இன்று எம்மீது குற்றஞ் சுமத்துகின்றனர் என்றார்.(பா)

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை