மங்கள நீரோட்ட திறப்பு ஜனாதிபதியால் ஆரம்பிப்பு

களுகங்கை நீர்த் தேக்கம்

புதிய அம்பன நகரமும் மக்களிடம் கையளிப்பு

விவசாய பொருளாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் என்பன அரசியல் தலைவர்களின் கடமைகளானபோதிலும் ஆரோக்கியமான மக்கள் சமூகத்தை உருவாக்குவதற்கு தடை ஏற்படும் வகையிலான தீர்மானங்களை மேற்கொள்வதை அவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

21ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிய நீர்ப்பாசன புரட்சியாக கருதப்படும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட களுகங்கை நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்ட நீரை சுபவேளையில் திறந்துவிடும் மங்கள நீரோட்டம் மற்றும் புதிய அம்பன நகரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களுள் பொதுமக்களுக்கு அதிகளவிலான நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் திட்டமாக அமைவது மொரகஹகந்த – களுகங்கை பாரிய பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்டமாகும்.

நாட்டின் விவசாய மக்களுக்கு இத் திட்டத்தின் ஊடாக பெருமளவு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதனால் விவசாய பொருளாதாரம் சுபீட்சமடைவதுடன், நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் இதனூடாக பெரும் பங்களிப்பு வழங்கப்படுகின்றது.

இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் இரசாயன பசளைகள் பெற்றுத்தரப்படுமென தெரிவித்துள்ள கருத்துடன் நான் உடன்படவில்லை. இரசாயன பசளை பயன்பாடானது சிறுநீரக நோய் அதிகளவில் பரவுவதற்கு காரணமாகும் என்பது தற்போது உறுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காக இரசாயன பசளை பயன்பாட்டினை தவிர்த்து சேதனப் பசளை பயன்பாட்டுக் கொள்கைகளை நோக்கி நாடு பயணிக்க வேண்டும் என்றார்.

இதேவேளை நிகழ்வில் மங்கள நீரோட்டம் சுபவேளையில் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட புதிய அம்பன நகரத்தை மக்களிடம் கையளித்தார்.

பின்னர் கோன்கஹவெல பழைய பிரதேச மருத்துவமனைக்கு பதிலாக சகல வசதிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய மருத்துவமனை, கமநலசேவைகள் நிலையம், சமுர்த்தி அலுவலகம், பொலிஸ் காவலரண், தபால் அலுவலகம், நிலசெவன சேவை நிலையம், வாராந்த சந்தைக் கட்டிடம், வனப் பாதுகாப்பு அலுவலகம், லக்கல, குருவெல பிரதேச வன ஜீவராசிகள் அலுவலகம் மற்றும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்டியதாக கண்கவரும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதி ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

 

Fri, 11/08/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக