அல்பேனியாவில் சக்திவாய்ந்த பூகம்பம்: அறுவர் உயிரிழப்பு

அல்பேனியாவில் ஏற்பட்ட 6.4 ரச்டர் அளவான சக்திவாய்ந்த பூகம்பத்தில் கட்டடங்கள் இடிந்து பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் பயத்தில் தனது ஜன்னல் கதவால் குதித்து உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 150 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

தலைநகர் டிரானாவில் இருந்து வட மேற்காக 34 கிலோமீற்றர் தொலைவில் நேற்றுக் காலை இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த அதிர்வு இத்தாலி மற்றும் 700 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் செர்பிய நகர் நொவி சாட்டிலும் உணரப்பட்டுள்ளது.

இதில் உயிரிழந்த ஒரு மூதாட்டி தனது பேரனை அணைத்தபடி அவனது உயிரை காப்பாற்றியிருப்பதாக அவசரப் பணியாளர்கள் அல்பேனிய ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளனர்.

துறைமுக நகரான டுரசில் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை காப்பற்றும் முயற்சியில் தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்திற்கு ஊர் மக்கள் உதவி வருவதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த நகரில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

பூகம்பம் மையம் கொண்ட பகுதிக்கு அருகில் இருக்கும் துமானே நகரில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த பூகம்பத்திற்கு பின்னர் பல அதிர்வுகளும் பதிவாகி இருப்பதோடு அதில் ஒன்று 5.3 ரிச்டர் அளவில் இருந்துள்ளது.

அல்பேனியாவில் இரு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பூகம்பத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன. பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை