ஐ.தே.முன்னணி எம்.பிக்களுடன் பேசி முடிவை அறிவிக்க சபாநாயகர் பணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம்

எதிர்க் கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில் இரு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பதால் சபாநாயகர் கருஜயசூரிய ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தீர்க்கமான முடிவை உடன் பெற்றுத்தருமாறு அக் கட்சியின் செயலாளரிடம் கேட்டிருப்பதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு நேற்று விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கு பெற்றுத்தருமாறு கோரி அக் கட்சியின் 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதமொன்றை நேற்று முன்தினம் மாலை சபாநாயகரிடம் கையளித்திருந்தனர்.

அக்கோரிக்கை தொடர்பில் உடன் கவனம் செலுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரிடம் கேட்டிருக்கும் சபாநாயகர் 57 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றையும் வழங்கியுள்ளார்.

இந்த 57 பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை கவனத்தில் எடுத்து எதிர்க் கட்சித் தரப்பின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக தனக்கு அறியத்தருமாறு சபாநாயகர் கோரியுள்ளார்.

தற்போதைய நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் தொடர்பில் வேறுபட்ட இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பதால் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றை எட்டி அந்த தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக தனக்கு அறியத்தருமாறும் சபாநாயகர் கேட்டிருக்கின்றார்.

அதன் பின்னர் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கமைய சபாநாயகர் அந்த முடிவை அடுத்த பாராளுமன்றம் கூடும் போது அறிவிப்பாரெனவும் அதன் பின்னரே எதிர்க் கட்சித் தலைவர் பதவி உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.ஏ.எம். நிலாம்

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை