மொட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழனும் ஈனப்பிறவிகளே

வாக்களிக்க செல்லும்போது மொட்டு சின்னத்தை பார்த்தால் தமிழர்கள் வெறுப்படைய வேண்டும். கடந்தகால அநியாயங்களை மறந்து மொட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழனும் ஈனப்பிறவிகள் என்றே கருதப்படுவர் என டெலோ அமைப்பின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மாபெரும் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு வருகைதந்த அவரை பெருந்திரளான மக்கள் ஒன்றினைந்து வரவேற்றனர்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழர்கள் நினைத்தால் தென் இலங்கையின் அரசியலை மாற்றலாம் எனும் பெருமை கொண்டவர்கள் நாங்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவை தோற்கடித்து மைத்திரியை ஜனாதிபதியாக மாற்றிய வரலாறு படைத்தவர்கள். இரண்டாவது தடவையும் அச்சந்தர்ப்பம் நமக்கு கிடைத்துள்ளது.

ஆகவே வாக்களிக்க செல்லும்போது மொட்டு சின்னத்தை பார்க்கும் தமிழர்கள் வெறுப்படைய வேண்டும். எங்களது உறவுகள் அழிக்கப்பட்டதை நினைத்துப்பார்க்க வேண்டும். அதையும் தாண்டி மொட்டு மலர்ந்தால் எமக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்பது ஒரு புறமிருக்க எங்களுக்கு அக்குடும்பம் செய்த அநியாயம் சரி என நியாயப்படுத்தப்படும் என்றார்.

ஆகவே கிழக்கு மாகாண மக்கள் சரியான விகிதாசாரத்தில் அன்னச்சின்னத்திற்கு வாக்களித்து நாங்கள் தன்மானம் மிக்க இனம் என்பதை கேள்வி கேட்பவர்களுக்கு பதிலாக வழங்க வேண்டும். 17ஆம் திகதி முடிவுகள் வெளிவருகின்றபோது கிழக்கு மாகாணத்தின் மூலமே வெற்றி கிடைத்துள்ளது எனும் செய்தி வெளிவரவேண்டும் என்றார்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை