இந்திய, பாக்., நேபாள பிரதமர்கள் பிரதமர் மஹிந்தவுக்கு வாழ்த்து

பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இந்தியா, பாகிஸ்தான், மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நேபாள பிரதமர் கே.பி சர்மாவும் புதிய பிரதமருக்கான தமது வாழ்த்துக்களை டூவிட்டர் மூலம் தெரிவித்திருந்தனர்.

இலங்கை,- இந்திய உறவை மேலும் பலப்படுத்துவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக பாரத பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு டூவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இரு நாடுகளினதும் பிராந்தியத்தினதும் அமைதி மற்றும் அபிவிருத்திக்காக இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இரண்டு முறை நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த போது அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டிய பிரதமர் இம்ரான் கான் இலங்கை- பாகிஸ்தான் உறவை வலுப்படுத்தும் வகையில் அவருடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அவர் பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.

அழைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் இலங்கை- பாகிஸ்தான் உறவை கட்டியெழுப்ப எதிர்காலத்தில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்தார்.

நேபாள பிரதமர், சிறந்த இலங்கை- நேபாள உறவுகளுக்காக பிரதமர் ராஜபக்ஷவுடன் நெருக்கமாக பணியாற்ற விரும்புவதாக செய்துள்ள டூவிட்டுக்கு இலங்கைப் பிரதமர் பதில் டூவிட் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

Fri, 11/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை