வங்குரோத்து அரசியல் வெளிப்பாடே விலை அதிகரிப்பு பிரசாரம்

மாவிலையில் மாற்றமில்லை  என்கிறார் அமைச்சர் மங்கள

தோல்வியை சந்திக்க விரும்புவர்களின் வங்குரோத்து அரசியல் செயற்பாடுகளை நிராகரிப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார். கோதுமை மா விலை அதிகரிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் இதனால் கோதுமை மாவிற்கு பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் சில ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானதெனவும் சில அரசியல் வாதிகளின் பின்புலத்திலேயே இந்த பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற அவசர செய்தியாளர் மாநாடொன்றிலேயே இத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்திக்கவிருக்கும் நிலையில் இரண்டு இலத்திரனியல் ஊடகங்கள் மிகவும் மோசமான பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும் இது குறித்து மக்கள் விழிப்புடன் செய்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

கோதுமை மாவின் விலை தொடர்பில் பரப்பட்டு வரும் இந்த பொய்யான தகவல்கள் ஒரு தரப்பை நியாயப்படுத்தும் விதத்தில் வெளியிடப்படும் செய்திகளாகும். மாவின் விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை நியமித்த வாழ்க்கைச் செலவு உபகுழுவின் சிபாரிசு அவசியமாகும். அத்துடன் நுகர்வோர் அதிகார சபையின் சிபாரிசும் அவசியமானது அது எதுவும் இல்லாமல் இந்த விலை அதிகரிப்பு செய்ய முடியாது.

அதேபோன்று எந்த வித அறிவித்தலுமின்றி இன்றிரவுக்கு பின் கோதுமை மாவின் விலையை அதிகரித்தால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்

Sat, 11/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை