துர்க்மெனிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு

பசால் தலைவராக நியமனம்

துர்க்மெனிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 2022 பிபா உலகக் கிண்ண தகுதிகாண் மோதலின் இரண்டாம் கட்ட போட்டிக்கான இலங்கை அணி கடந்த (13) இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டாரில் 2022ஆம் அண்டு இடம்பெறவுள்ள பிபா உலகக் கிண்ண தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டில் சீனாவில் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண கால்பந்து தொடர் என்பவற்றில் பங்குபற்றும் அணிகளைத் தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகளின் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன.

இந்த சுற்றில் எச் குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, முதல் கட்டப் போட்டிகளில் 3 போட்டிகளை சொந்த மைதானத்திலும், தென் கொரிய அணிக்கு எதிரான போட்டியை வெளி மைதானத்திலும் எதிர்கொண்டது. எனினும், குறித்த 4 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது.

எதிர்வரும் 19ஆம் திகதி துர்க்மெனிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெறும் போட்டியுடன், இலங்கை அணி தமது இரண்டாம் கட்ட மோதல்களை ஆரம்பிக்கின்றது. துர்க்மெனிஸ்தான் கொபெட்டங் அரங்கில் இடம்பெறும் இந்த மோதலில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இம்மாதம் 17ஆம் திகதி நாட்டியில் இருந்து புரப்படும்.

இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள 23 பேர் கொண்ட இலங்கை குழாமில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவுகளுக்கு இடையிலான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியின்போது உபாதைக்குள்ளான கோல் காப்பாளர் மொஹமட் லுத்பி மற்றும் மொஹமட் சஹீல் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலாக கோல்காப்பாளர் நுவன் கிம்ஹான மற்றும் ஜேர்மனியில் தொழில்முறை கால்பந்து ஆடும் வசீம் ராசிக் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தென் கொரிய அணிக்கு எதிரான போட்டியின்போது தோல்பட்டை உபாதைக்கு உள்ளான தேசிய அணியின் தலைவர் கவிந்து இஷான் இன்னும் பூரண குணமாகாத நிலையில், அவர் இன்னும் அணியில் இணைக்கப்படவில்லை.

இறுதியாக இடம்பெற்ற எமன் அணிக்கு எதிரான மோதலில் இலங்கை அணியை வழிநடாத்திய மொஹமட் பசால் இந்தப் போட்டியிலும் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Sat, 11/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை