புதிய ஜனாதிபதி கோட்டாபய மாகாண சபை தேர்தல்களை நடத்த நடவடிக்ைக எடுக்க வேண்டும்

தேர்தல் விஞ்ஞாபனங்களில் தெரிவித்த விடயங்களை செயற்படுத்த புதிய ஜனாதிபதியும் தோல்வியடைந்த வேட்பாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று கேட்டுக் கொண்டார். காணாமலாக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்த புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

2019 ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை அறிவிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது. இதில் சகல வேட்பாளர்களும் கலந்து கொண்டதோடு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தேர்தலை நீதியாகவும் அமைதி யாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வேட்பாளர்கள்,கட்சி செயலாளர்கள்,ஆதரவாளர்கள் பொலிஸார் உட்பட சகல தரப்பினருக்கும் எமது நன்றியை தெரிவிக்கிறோம்.

போஸ்டர், கட்அவுட் இன்றி ஆரம்பமுதல் ஒத்துழைப்பு வழங்கியதற்கும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தல் காலத்தில் நாம் சில துறைகளில் தோல்வியடைந் தோம். அரச தனியார் ஊடகங்களில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் போனது. அரச ஊடகங்களை கட்டுப்படுத்த சட்ட ரீதியான ஏற்பாடுகள் உள்ள போதும் தனியார் துறைக்கு எதுவும் கிடையாது.

ஒரு அரச ஊடகமும் சில தனியார் ஊடகங்களும் கட்டுப்பாடின்றி செயற்பட்டன.

தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆணைக்குழுவிற்கு அதிகாரம் கிடையாது. சட்டவிரோதமாக செயற்பட்ட அரச நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் ஊடகங்கள் தொடர்பில் சட்டரீதியான ஏற்பாடுகள் அவசியம். அல்லது அவை தாம் எந்த கட்சி சார்பில் செயற்படுவதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

வெளிப்படையாக தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட மற்றும் அரச சொத்துக்களை தேர்தலுக்கு பயன்படுத்திய அரச ஊழியர்களக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏனைய தேர்தல்களை விட இம்முறை மதத் தலைவர்கள் அரசியல் ரீதியான தலையீடுகளில் கூடுதலாக ஈடுபட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

ஜனாநாயகத்திற்கு நீதியான தேர்தலே பலம் சேர்ப்பதாக கூறிய அவர், ஜனநாயக சமூகமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை புதிய ஜனாதிபதியும் தோல்வியுற்ற வேட்பாளர்களும் செயற்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறிய அவர் ஜனநாயக நாடாக முழு நாட்டையும் வழிநடத்த புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

Mon, 11/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை