எதிர்க்கட்சி தலைவராக ரணில்; சபாநாயகர் அங்கீகாரம்

பாராளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் எதிர்க் கட்சித் தலைவராக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே தன்னால் அங்கீகரிக்க முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருக்கின்றார்.

ஆனால் அதுதான் இறுதியான முடிவாக அமையாது எனவும் ஐக்கிய தேசிய முன்னணி கூடி பிரிதொருவரை எதிர்க் கட்சித் தலைவராக அறிவிப்பார்களானால் அதனை தன்னால் சாதகமாக பரிசீலிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகியதையடுத்து ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. ஐக்கிய தேசிய முன்னணி எதிர்க் கட்சியில் அமர்ந்து செயற்படுவதெனத் தீர்மானித்தது.

 

இந்நிலையில் எதிர்க் கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் எழுத்து மூலம் சபாநாயகரிடம் கோரினார். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியின் மற்றொரு தரப்பு சஜித் பிரேமதாஸவை எதிர்க் கட்சி தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தி 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மகஜர் ஒன்றை கையளித்தது.

இரண்டையும் கவனத்தில் எடுத்து சபாநாயகர் இது உட்கட்சி விவகாரம், அவர்கள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார். எனினும் பாராளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே இருப்பதால் அவரையே எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தீர்மானித்து பிரிதொருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரினால் அது குறித்து உரிய கவனம் செலுத்த முடியும் எனவும் சபாநாயகர் கூறினார்.

எம்.ஏ.எம். நிலாம்

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை