ஹரீன் சமர்ப்பித்த சட்டமூலத்தால் சபையில் நேற்று கடும் சர்ச்சை

விளையாட்டுத்துறையில் ஊழல், சூதாட்டம்;

விளையாட்டுத்துறையில் சூதாட்டம், ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த சட்டமூலம் தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

மேற்படி சட்டமூலம் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு அதன் அனுமதியுடனேயே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென எதிர்க் கட்சியினர் தெரிவித்தனர்.

இதன்போது விளையாட்டுத்துறையைத் தூய்மைப்படுத்த மிக முக்கியமானதாகவுள்ள மேற்படி சட்ட மூலத்தை உடனடியாக சபையில் சமர்ப்பித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என ஆளும் கட்சியினர் சபாநாயகரைக் கேட்டுக்கொண்டனர். அதனையடுத்து சபையில் இது தொடர்பான சர்ச்சை வலுப்பெற்றது.

அமைச்சர் ஹரீன்

பெர்னாண்டோ

விளையாட்டுத்துறையில் சூது மற்றும் ஊழல் மோசடிகளுடன் காட்டிக்கொடுத்தல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையிலிருந்து விளையாட்டுத் துறையைப் பாதுகாக்கவே மேற்படி சட்டமூலம் தயாரிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக இதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதைத் தடுக்க சில தரப்பினரால் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமக்குப் பாதிப்பு ஏற்படும் என நினைப்பவர்களே சூழ்ச்சிகளை மேற்கொண்டு அதனைத் தடுக்கப் பார்க்கின்றனர். அதற்கு இடமளிக்கக்கூடாது. அது தொடர்பில் சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டியது அவசியம்.

அமைச்சர் அஜித் பி பெரேரா

இந்த சட்டமூலம் எமது விளையாட்டுத் துறையைத் தூய்மைப்படுத்துவதற்கு மிக முக்கியமானதாகும்.

யாரோ செல்வாக்குப் படைத்தவர்களே இதனைத் தடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டுள்ளனர். மேலும் காலம் தாமதிக்காமல் உடனடியாக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது அவசியம்.

அமைச்சர் அர்ஜுண ரணதுங்க

நான் ஒரு விளையாட்டு வீரர் என்ற வகையில் விளையாட்டுத்துறை மிக மோசமான நிலையில் உள்ளதைக் குறிப்பிட முடியும். ஊழல் மோசடிகள் மற்றும் காட்டிக்கொடுப்புகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. அதனைக் கருத்திற்கொண்டு மேற்படி சட்டமூலத்தை மேலும் தாமதிக்காமல் சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பந்துல குணவர்த்தன

நாம் ஊழல் மோசடிக்குத் துணை போபவர்கள் அல்ல. மேற்படி சட்டமூலம் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் அனுமதியைப் பெற்ற பின்னரே சபையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரி க்கை.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

 

Fri, 11/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை