கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை

  • பிரஜாவுரிமை நீக்கப்பட்டோர் காலாண்டு பட்டியலில் கோட்டாவின் பெயர் இல்லை
  • ட்விற்றரில் மோதிக் கொண்ட ஹரின் பெனாண்டோ - நாமல் ராஜபக்‌ஷ
  • கோட்டாபயவின் சட்டத்தரணி அலி சப்ரியும் மறுப்பு
  • சுமங்கல தேரர் சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதம்
  • அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்த மறுப்பு

தற்போது இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷ இன்னும் அமெரிக்க பிரஜையே என, அமைச்சர் ஹரின் பெனாண்டோ தனது ட்விற்றர் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து மீண்டுமொரு சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்க நிர்வாக ஆவணங்களை வெளியிடும் அரசாங்க மத்திய பதிவு (Federal Register) இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

2019 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான (செப்டெம்பர் 30, 2019) அமெரிக்க பிரஜாவுரிமையை மீளப்பெற்றுக் கொண்டவர்களின் பெயர்ப் பட்டியல் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பட்டியலை சுட்டிக்காட்டி அமைச்சரினால் குறித்த பதிவு இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ எனும் பெயர் உள்ளடக்கப்படவில்லை எனவும், கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்கப் பிரஜை என்பதால், அவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டாலும் அவரால் ஜனாதிபதியாக செயற்பட முடியாது எனவும் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அமெரிக்கப் பிரஜை இல்லை எனவும், அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கும் ஆவணமொன்றையும், நாமல் ராஜபக்ஷ எம்.பி. தனது ட்விற்றர் கணக்கில் பதிவிட்டுள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சியினர் தற்போது மற்றுமொரு சேறு பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மற்றுமொரு பதிவை இட்ட அமைச்சர் ஹரின் பெனாண்டோ, குறித்த ஆவணம் இரு வேறு வடிவில் காணப்படுவதாகவும், அதில் மாற்றங்கள் செய்து வௌியிடப்பட்டுள்ளதாகவும் அதுவே தேர்தல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஆவணங்களில் பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுவதாகவும், இலக்கணப் பிழைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து வந்த பதிவுகளில் பயனர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பான சந்தேகங்களை மறுப்பதாக, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தம்மிடம் இருப்பதாகவும் அவை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ நவம்பர் 17 ஆம் திகதி (தேர்தலுக்கு மறுநாள்) நாட்டை விட்டு செல்வதற்கு ஆயத்தமாகும் வகையிலான ஆவணங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளிவருவதாகவும் அவை பொய்யானது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிலையில் கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டுள்ளார் எனின், அது தொடர்பில் 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்துமாறு கோரி அவர் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

எமது இறையாண்மை மிக்க தாய்நாட்டை அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷவின் சதியிலிருந்து தப்பிப்போம் எனத் தெரிவிக்கும் வகையில் பெனர் ஒன்றும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இது தொடர்பில் ஊடக நிறுவனமொன்று கோட்டாபய ராஜபக்‌ஷவின் பிரஜாவுரிமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு விடுத்த கோரிக்கையை அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது.

விசா மற்றும் பிரஜாவுரிமை தொடர்பான தனிநபர் தகவல்கள் தொடர்பில் அமெரிக்க தூதரகத்தினால் கருத்துத் தெரிவிக்க முடியாது என, அதன் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 11/10/2019 - 17:36


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக