சிங்கள கட்சிகளை நம்பி பிரயோசனம் இல்லை

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து நான் விலகாவிட்டால் என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரெலோ தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலமாகவே அறிந்தேன். ஆனால் எவ்வித கடிதங்களும் எனக்கு வரவில்லை. அவ்வாறு கடிதம் வந்தால் அதற்கு நான் விளக்கத்தை அனுப்பி வைப்பேன் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா வாடி வீட்டில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

இது எட்டாவது ஜனாதிபதி தேர்தல். சிங்கள கட்சிகளை நம்பி பிரயோசனம் இல்லை. தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தி பல சுற்றுப் பேச்சுக்களை நடத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முன்னின்று செயற்பட்டுள்ளார்கள். பிரதான வேட்பாளர் மூவருக்கும் அனுப்பப்பட்டது. அக் கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக பார்த்து அதனை முற்று முழுதாக ஏற்றுக் கொள்கின்றேன். அக் கோரிக்கைகளின் அடிப்படையில் 5 தமிழ் கட்சிகளும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால் நான் போட்டியில் இருந்து விலகத் தயார் என்றும் கூறியிருந்தேன்.

இதைவிட இரண்டு கோரிக்கைகைளை ஒருவராவது ஏற்றுக் கொண்டால் விலகுவதாக தெரிவித்திருந்தேன்.

அரசியலமைப்பில் 13வது திருத்தம் உட்பட அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய அரசியலமைப்பு வருகின்ற போது ஒற்றையாட்சி, பௌத்தம் என்ற முன்னுரிமை இல்லாமல் அரசாங்க தரப்பு பேச வேண்டும். அதுபோல் எங்கள் தரப்பும் பேச வேண்டும். அதற்கும் எவரும் பதிலளிக்கவில்லை. ஆகையால் இனி போட்டியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும் என கருதவில்லை.

புதிய ஜனநாயக முன்னனியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழர் விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. கோட்டபாய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் எவையும் இல்லை. அனுரகுமார திசாநாயக்காவும் தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வைக் கூற தவறிவிட்டார். அதனால் தான் 5 கட்சிகளும் எக் கட்சிக்கும் வாக்களிக்குமாறு நாங்கள் கைகாட்ட முடியாது. நீங்கள் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்கள். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் அவ்வாறு கூறியிருக்கிறார்.

இனி தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது மற்றைய தமிழ் கட்சிகளோ புதிய ஜனநாயக முன்னனிக்கு அடையாளம் காட்ட மாட்டார்கள் என நம்புகிறோம். ஏனெனில் அடையாளம் காட்டினால் அக் கட்சி வெற்றி பெறாது என்ற கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆகவே இவர்கள் மறைமுகமாக வேலை செய்து சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவர்.

எது எப்படியோ தமிழ் மக்களது வாக்குகள் தேவை. ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் சொல்ல மாட்டோம் என மூன்று வேட்பாளர்களும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

எனவே எங்களுடைய மக்கள் நவம்பர் 16 ஆம் திகதி தீர்மானம் எடுக்க வேண்டும். தபால் மூல வாக்களிப்பில் கணிசமானோர் பிரதான கட்சிகள் இரண்டையும் நிராகரித்து வாக்களித்ததாக பல்வேறு இடங்களில் இருந்து கூறுவது உற்சாகத்தை தருகிறது. மக்களுக்கும் இந்த நிலைமைகள் தெரியவரும் என்றார்.

வவுனியா விசேட நிருபர்

Sat, 11/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை