அதிஉச்ச பாதுகாப்பு

 உஷார் நிலையில் அதிரடிப்படை, கலகம் அடக்கும் பொலிஸார்

 வீதிகளில் நின்றால் கைது

 வெற்றிக் கொண்டாட்டம் நடத்த ஒருவாரம் தடை

 கைபேசிகளுடன் வாக்களிக்க செல்லவேண்டாம்

அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக நாடு முழுவதும் அதிஉச்ச பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய தேர்தல் கடமைகளுக்கென நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள 60,175 பொலிஸாரும் 8,080 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நேற்றுக் காலை முதல் கடமைகளை ஆரம்பித்திருப்பதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர ஊர்ஜிதம் செய்தார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது இம்முறை மிகவும் அமைதியான முறையில் இத் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளபோதும் தேர்தல் தினத்தன்றும் அதற்குப் பின்னரும் சட்டவிரோதச் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறாது என்பதை உறுதிசெய்யும் வகையில் பொலி ஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகத் தடுப்பு பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் வீதிகளில் குழுமி நிற்காமல் உடனடியாக வீடுகளுக்குத் திரும்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறு 500 மீற்றருக்கு உட்பட்ட தூரத்தில் குழுமி நிற்பவர்களும் வாக்களிக்கச் செல்வோரிடம் பிரசாரம் செய்வோர் மற்றும் அச்சுறுத்தல் விடுப்போர் கைது செய்யப்படுவரென்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தேர்தல் முடிவடைந்த பின்னர் ஒருவார காலத்துக்கு ஊர்வலங்கள் மற்றும் வெற்றிக்களிப்புக்கான கொண்டாட்டங்களை முன்னெடுப்பது சட்டவிரோதமானதென்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, தேர்தல் தினத்தன்று வாக்குச் சாவடிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் எடுத்துச் செல்வதனை தவிர்த்துக் கொள்ளவும்.

தேர்தலை முன்னிட்டு நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டாலும் வழமையாக நடைமுறையிலுள்ள 119 சேவை, முறைப்பாடுகளைப் பெறுவது, நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களை பாதுகாக்கும் சேவை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன்புரி தொடர்பில் ஆராயும் சேவை என்பன வழமைபோலவே முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது-, ஒரு வாக்குச் சாவாடிக்கு இரண்டு பொலிஸார் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 43 வாக்கெண்ணும் நிலையங்களுக்கும் 2 ஆயிரத்து 193 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மேலதிகமாக 153 கலகமடக்கும் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீதி பாதுகாப்பு கடமைகளில் மொத்தமாக ஆயிரத்து 688 பொலிஸாரும் 190 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடவுள்ளனர். விசேட அதிரடிப்படையினரும் ரோந்து சேவைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இதுவரை 107 முறைப்பாடுகளும் 115 சட்டவிரோதச் செயற்பாடுகளும் பதிவாகியுள்ளன. இவை தொடர்பில் இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையடக்கத்தொலைபேசியின் ஒலி தேர்தல் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால் அதனை வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ளவும். மேலும் வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை உடன் எடுத்துச் செல்லவும். வாக்குச் சாவடிகள் இருக்கும் இடங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட பொது வாகனங்களைத் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

அத்துடன் 500 மீற்றருக்கு உட்பட்ட வீடுகளில் அதிக சத்தத்துடன் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளை ஒலி,ஒளிபரப்புச் செய்ய முடியாது.

அதிகமான போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. இதற்காக 60 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார்.

லக்ஷ்மி பரசுராமன்

Sat, 11/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை