இந்தியா, அவுஸ்திரேலியா இங்கிலாந்து கிரிக்கெட் சபைகள் ஐ.சி.சியுடன் முறுகல்

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தமது எதிர்கால போட்டி அட்டவணையில் (2023- – 31 வரையிலான காலப்பகுதிக்குள்) நடாத்தவுள்ள உலகக் கிண்ணம் போன்ற எட்டு கிரிக்கெட் தொடர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை , அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஆகியவை ஒருமித்த நிலையில் எதிர்ப்பை காட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் சபை இந்த எட்டு கிரிக்கெட் தொடர்கள் மூலமும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேலதிகமாக ஒரு கிரிக்கெட் தொடரினை நடாத்துகின்றது எனக் கூறியே உலகில் உள்ள மூன்று பலமிக்க கிரிக்கெட் சபைகளாக (Big Three) கருதப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவை ஒருமித்த நிலையில் தமது எதிர்ப்பை காட்டியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

குறித்த சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடைபெறும் காலப்பகுதியில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்குபெறும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் பல பாதிக்கப்படுவதாக காரணம் காட்டப்பட்டிருக்கின்றது. அத்துடன் இவ்வாறாக எட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடாத்தப்படுவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பையும் பெறுமதி இல்லாத ஒன்றாக மாற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபை எதிர்கால கிரிக்கெட் தொடர்கள் அடங்கலாக அதன் வரைவில் உள்ளடக்கியுள்ள புதிய விடயங்கள் மாற்றப்படாத சந்தர்ப்பத்தில், இந்திய கிரிக்கெட் சபை இந்த விடயங்களுக்கான தமது ஒப்ப அனுமதியினை வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தற்போது மூன்று பலமிக்க கிரிக்கெட் சபைகளும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பினைக் காட்டுவதனால் சர்வதேச கிரிக்கெட் சபைக்கும் இந்த மூன்று கிரிக்கெட் சபைகளுக்கும் இடையில் வரும் நாட்களில் சில முரண்பாடுகள் ஏற்பட முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை