கோட்டாபய ராஜபக்‌ஷ இம்முறை வெற்றி பெற்றால் இனி தேர்தலே நடைபெறாது

சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பதே நமக்கு பலம்

கோட்டாபய இம்முறை வெற்றி பெற்றால் இனி தேர்தல் ஒன்றே நடைபெறாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியாவில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து சனிக்கிழமை இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு

வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியது. ஜனாதிபதி தேர்தல் எங்கள் முன் வருகிற போது இதற்கும் தமிழ் மக்களுக்கும் சம்பந்தம் இல்லை. இது தெற்கில் நடக்கும் ஓர் அரசியல் போட்டி. இதில் எங்களை ஈடுபடுத்த தேவையில்லை என்ற பரப்புரை தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படுகிறது. இது எப்பொழுதும் செய்யப்பட்டது. ஆனால் சென்ற தேர்தலில் மக்கள் அதற்கு செவி கொடுக்கவில்லை. வடக்கு, கிழக்கு பகுதிகளில் கூடுதலான வாக்குகள் கிடைத்தமையால் தான் மற்றைய பகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷ கூடிய வாக்கு பெற்ற போதும் மைத்திரிபால சிறிசேன வெல்லக் கூடியதாக இருந்தது. அப்பொழுது மஹிந்த ராஜபக்ஷ சொன்ன கருத்து "ஈழம் வாக்குகளால் நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன்." கேட்க மனதுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

நான் இவர்களை தோற்கடித்து விட்டேன். இனி தமிழ் தேசியம் என்ற ஒன்று கிடையாது. தமிழ் மக்களுடைய உரித்துக்கள் என்று எதுவும் கிடையாது. அதை போரிலே நான் முறியடித்து விட்டேன். அரசியலில் உரித்துக்கள் என்று பெரிதாக எதுவும் இந்த நாட்டில் இல்லை. அதை போரிலே நான் முறியடித்து விட்டேன் என்று மார் தட்டிக் கொண்டு இருந்தவர் தேர்தலில் தோற்று இது ஈழத்தில் வாக்குகளால் அடைந்த தோல்வி என்பதை ஒப்புக் கொண்டார்.

நாங்கள் தெளிவான ஓர் அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்கிற ஒரு அரசியல் கட்சி. அரசியல் கட்சிகளினுடைய கூட்டமைப்பு. எங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெட்டத்தெளிவாக தெரியும். எங்களுடைய மக்களுக்கும் தெரியும். இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் தெரியும். பத்திரிகையில் கட்டுரை எழுதும் அரசியல் வித்தகர்கள் சொல்வதைப் போல் நாங்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

நாங்கள் வாக்களிக்காமல் விட்டால் யார் வெல்லுவார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்த கட்டுரையாளர்கள் எல்லாம் எதை விரும்புகிறார்கள். யார் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

எங்களுக்கு வாராவாரம் இலவசமாக ஆலோசனை சொல்லிக் கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு இது தெரியாதா? ஆகவே அந்த வெற்றிக்காக தானா இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.

2005 ஆம் ஆண்டிலே நாங்கள் ஒரு பாடத்தை படித்தோம். சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அதிகார பகிர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதுதான் எங்களுடைய சிந்தனை. இதில் மாற்றம் இல்லை. 2005 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக சமஷ்டி என்று கூறி தேர்தலில் போட்டியிட்டார்.

இன்று எவரும் சொல்லுவதில்லை. நான் அதை சொல்லவில்லை என்று தான் எல்லோரும் துடித்து துடித்து சொல்கிறார்கள். சமஷ்டி என நான் எவருடனும் பேசவில்லை என சஜித் பிரேமதாச சொல்கிறார். ஏனென்றால் சமஷ்டி பற்றி பேசினேன் என்றாலே தோற்று விடுவேன் என்ற பயம். அன்றைக்கு ரணில் சொல்லி போடியிட்டதால் தோற்றார்.

ஏன் நாங்கள் வாக்களிக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு ஓகஸ்டில் சந்திரிகா அம்மையார் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வந்தார். அதில் ஒற்றையாட்சியை முற்றாக தவிர்த்து சமஷ்டி என்று சொல்லா விட்டாலும் முழுக்க முழுக்க சமஸ்டி அப்படையிலான திட்டம். நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 2000 ஆம் ஆண்டிலும், 2005 ஆம் ஆண்டிலும் எங்களுக்கு சரியான தீர்மானமோ அல்லது பிழையான தீர்மானமோ ஆனால் ஒரு மாற்று வழி கையில் இருந்தது. கையில் ஆயுதம் இருந்தது. அந்த நேரத்தில் அப்படியொரு தீர்மானத்தை எடுத்தோம். அது சரியாக இருக்கலாம். அல்லது பிழையாக இருக்கலாம்.

இன்று எமது கையில் என்ன மாற்று வழி இருக்கிறது. வேறு ஒரு மாற்று வழியும் இல்லாத நேரத்தில் எங்களுடைய கையில் இருக்கிற பலமான வாக்கு என்கிற ஆயுதத்தை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

எங்களுடைய வாக்கு தான் சென்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளனை நிர்ணயித்தது. அப்படியான பலமான ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு அதை பாவிக்கக் கூடாது என்கிறார்கள். அப்ப எதை பாவிப்பது. இது எதையும் அடைவதற்கான ஒரு ஆயுதமும் அல்ல. இது ஒரு கேடயம். வாள் அல்ல. எங்களை நோக்கி வீசப்படும் ஈட்டிகளை தடுப்பதற்கான ஆயுதம். எங்களை பாதுகாப்பதற்கான ஆயுதம். முதலில் அது தான் தேவை. எங்களுடைய இருப்புக்களை நாங்கள் முதலில் பிடித்து வைத்திருக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டிலும் அதைத் தான் நாங்கள் செய்தோம்.

ஆனால் முன்னேறினோம். நான்கு வருடத்தில் ஒன்றும் நமடக்கவில்லை என்று கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய். இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஊடகவியலாளருக்கு இன்னும் கூடுதலாக தெரியும். முன்னர் செய்தி எழுதுவதற்கு முன்னரே அவர்கள் சொந்த தணிக்கையில் ஈடுபட்டவர்கள்.

5 வருடத்தில் அது மறந்து போச்சோ தெரியவில்லை. இப்படி எழுதினால் அவர்களுக்கு கோபம் வந்து விடுமோ என பயந்தவர்கள் இன்றைக்கு எங்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள்.

 

வவுனியா விசேட நிருபர்

Mon, 11/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை