தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அதிகாரிகள் குழு அறிவிப்பு

அணியின் தலைமை அதிகாரியாக  மேஜர் ஜெனரல் தம்பத்

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கஹரா ஆகிய நகரங்களில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் 26 போட்டி நிகழ்ச்சிகளுக்கான சுமார் 600இற்கும் அதிகமாக வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அணியின் தலைமை அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோவை நியமிக்க தேசிய ஒலிம்பிக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கைப்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவரான இவர், இறுதியாக கடந்த வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா மற்றும் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவிலும் இலங்கை அணியின் தலைமை அதிகாரியாக செயற்பட்டிருந்தார்.

அத்துடன், இறுதியாக நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பண்பாடான அணிக்கான கௌரவத்தையும் இலங்கை அணி பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சாக் செல்லவுள்ள இலங்கை அணியின் பிரதி தலைமை அதிகாரிகளாக தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர் காமினி ஜயசிங்க, தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் உதவிப் பொருளாளர் சந்தன பெரேரா மற்றும் இலங்கை விமானப் படையின் விங் கொமாண்டர் ஷெரிக்கா சமரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இலங்கை அணியின் பிரதி தலைமை அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினர் காமினி ஜயசிங்க, இறுதியாக கடந்த வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா மற்றும் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவிலும் இலங்கை அணியின் பிரதி தலைமை அதிகாரியாக செயற்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

(பீ.எப் மொஹமட்)

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை