சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழர்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

மஹிந்தவின் சர்வாதிகாரத்தை தோற்கடித்தவர்கள் தமிழரே

10 வருடகால அட்டூழியங்களை மறந்து விடாதீர்கள்

13ஆவது திருத்தத்தை செயலிழக்கச் செய்தவர்கள் ராஜபக்‌ஷக்களே

ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசியல் பயணத்தை தொடர்வதற்கு எமது சமூகம் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமது பெறுமதியான வாக்குகளை வழங்க முன்வர வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.

எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வந்து அவரது சர்வாதிகார ஆட்சியினை தொடர்வதற்கு எத்தனித்த மஹிந்த ராஜபக்‌ஷவை எமது மக்களே தோற்கடித்தார்கள் என சுட்டிக்காட்டிய சம்பந்தன் ஜனநாயக உரிமைகளை நாம் பயன்படுத்தி எமது அரசியல் பயணத்தை தொடர்வதற்கு எமது சமூகம் சஜித் பிரேமதாசவிற்கு வாக்குகளை அளிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் மட்டக்களப்பு கல்லடி துளசி மண்டபத்தில்ஏற்பாடுசெய்திருந்த நிகழ்வில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:

10 வருட மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் எமது மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு முகம் கொடுத்தார்கள். அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் மீது திணிக்கப்பட்ட அட்டூழியங்களை எமது மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.

13 வது அரசியல் சாசனத்தை செயலிழக்கச் செய்தவர்களும் அவர்களே. இந் நிலையில் எமது மக்கள் தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டிய தருணமிது.

சஜித் பிரேமதாசவை நான் நன்கு அறிவேன். அவரது தந்தையாரின் குணாதிசயங்களும் எமக்குத் தெரியும்.

சஜித் பிரேமதாசவை நான் சந்தித்தபோது என்னிடம் அவர் நீங்கள் எந்தவிதமான அரசியல் தீர்வினை எதிர்பார்க்கின்றீர்கள் என்று கேட்டார்.

எனக்கு தமிழ் ஈழம் தரமுடியாது. அதற்கு மேலாக அதி உச்ச அதிகாரங்களை நான் பகிர்வேன் என்றார்.

எவ்வித களங்கமுமற்ற துவேசமுமற்றவர் சஜித் பிரேமதாச. அவரிடம் இருந்து எமது மக்களின் அதிகாரப் பகிர்வுகளைப் பெற்று ஜனநாயக ரீதியாக நாம் வாழ்வதற்கு அனைவரும் உறுதிபூண வேண்டும்.

இதனைப் பெறுவதற்காகவே நாம் பாடுபடுகின்றோம்.

இவ்வாறான தீர்வுகளை பெறுவதற்கு நாங்கள் முயற்சித்தபோது அதனை தாமதப்படுத்தியவர் மஹிந்த ராஜபக்‌ஷ.

கோட்டாவினால் ஒருபோதும் எதையும் செய்ய முடியாது. தாம் செய்த தவறுகளை மன்னித்துவிடும்படி கூறி வருகிறார்.

மீண்டுமொருமுறை நம்புவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளியோம். எனவே அனைத்து தமிழ் மக்களும் சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து மீண்டுமொருமுறை எமது பலத்தை நிரூபிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆரையம்பதி தினகரன் நிருபர் பத்ம

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை