மிலேனியம் சலேஞ்ச் ஒப்பந்தம் இடம்பெற்றால் முஸ்லிம்களின் நிலைபற்றி சிந்திக்க வேண்டும்

அரசாங்கம் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் என்ற இவ்வொப்பந்தம் சாத்தியமாகின்றபோது எமது நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் நிலை என்னவாகப் போகின்றது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கோட்டபாய ராஜபக்ஷவினை ஆதரித்து அட்டாளைச்சேனை தைக்காநகர்ப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம்(12) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் உள்ள எந்தவொரு மதத்தவர்களையும் நிந்திக்க நாம் இடமளிக்க மாட்டோம். எந்தவொரு இனத்தவர்களின் கலாசாரத்தினையும் பாதிக்காத வகையில் அனைத்து இனத்தவர்களையும் அரவணைத்து ஐக்கியம் மிக்க நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அதற்காக அனைவரும் மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து வளம் கொளிக்கும் நாடாக இந்நாட்டினை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும்.

நாம் எதிர்வரும் பதினேழாம் திகதி ஆட்சியினை அமைந்ததும் இந்நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்கும் உடனடியாக உலருணவுப் பொதியொன்றை மாதம் தோறும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆட்சியாளர்கள் நம் நாட்டினை மயான பூமியாக மாற்றியுள்ளனர். இந்நிலைமையினைப் போக்கி அபிவிருத்தி அடைந்த நாடாக எமது தேசத்தினை மாற்றியமைக்க எதிர்வரும் பதினாறாம் திகதி அனைவரும் ஒன்றுபட்டு மொட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

நாம் ஆட்சி அமைத்ததும் உரத்தினையும் விதைகளையும் இந்நாட்டு மக்களுக்காக இலவசமாக வழங்க காத்திருக்கின்றோம். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வேலை வாய்ப்பற்றுக் காணப்படும் பட்டதாரிகளுக்கும் உரிய வேலை வாய்ப்பு வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம்.

சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை நாம் வழங்கவுள்ளோம் அதற்காக இந்நாட்டில் உள்ள இளைஞர்களும் யுவதிகளும் தயாராகுங்கள்.

மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் தற்போது எந்த வித பயன்பாடுகளும் அற்ற முறையில் காணப்படுகின்றது. இப்பிராந்திய மக்கள் நன்மை பெற வேண்டும் என்ற நோக்கின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் துறைமும் கடந்த நான்கைந்து ஆண்டு காலமாக எவ்வித பயன்பாடும் அற்ற நிலையில் மூடப்பட்டு காணப்படுகின்றது.

இத்துறைமுகத்தின் மூலம் பலருக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட முடியுமாக இருந்தும் இதன் மூலமான தொழில் வாய்ப்புகள் இங்கு இடம்பெறவில்லை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் மூலம் நாம் வெற்றி பெற்றதும் ஒலுவில் துறைமுகத்தினை மீளவும் நவீன முறையில் புனரமைத்து இப்பிராந்தியத்தில் உள்ளவர்களின் தொழில் வாய்ப்புகளுக்காகவும், மீனவர்களின் நன்மை கருதியும் பயன்பாடுகள் கொண்ட துறைமுகமாக இதனை மாற்றியமைக்க உள்ளோம்.

எதிர்வரும் பதினேழாம் திகதி வெற்றி வாகை சூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் ஜனாதிபதிப் பயணத்தின் முதலாவது மண் பிடியினை எடுத்தவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா என்பதனை இவ்விடத்தில் கூறிக் கொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.

2015 ஆம் ஆண்டில் நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆட்சி மாற்றத்தினை இந்நாட்டில் ஏற்படுத்தினார்கள். ஆனால் இவ் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்நாட்டில் சொல்லிக் கொள்ளத்தக்க வகையில் என்ன நடந்துள்ளது என்பது பற்றி நான் பகிரங்கமாக கேட்க விரும்புகின்றேன் என்றார்.

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை