எமது ஆட்சியில் ஜனநாயகம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது

எமது ஆட்சியில் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் தொடர்ந்து இடம்பெறுவது ஜனநாயகம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதையே காட்டுகிறது என்று பொதுநிர்வாக, இடர் முகாமைத்துவ மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.

கொழும்பு வொக்க்ஷோல் வீதியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அரசியல் வன்முறை, பாலியல் குற்றங்கள், கொள்ளை, ஊழல் ஆகியவை ராஜபக்ஷ காலத்தில் இருந்ததை விட இப்போது குறைந்துள்ளன. நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு மிகுந்த சேவையாற்றியுள்ளது. அதிகாரத்தை பெறுவதற்கு முன்னரே எஸ். பி. திசாநாயக்கவின் கையாட்கள் மோசமான முறையில் நடந்துகொள்கின்றனர். படித்தவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது பற்றி இருமுறை சிந்திக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

சமூகம் ஒதுக்கிவிட்ட கருணா அம்மானும், பிள்ளையானும் மொட்டு கட்சியின் உயர் இடத்தில் உள்ளனர். ஆனால் இவ்வாறானவர்கள் சஜித்தின் பக்கத்தில் நிற்கக்கூட அருகதையற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சிரேஷ்ட பிரஜைகள் நன்றாக கவனிக்கப்படுகின்றனர். அதேநேரம் அரச தனியார் மற்றும் அரசுசார் துறை தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைள் வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் அங்கு கூறினார்.

தேசிய ஊடக கேந்திரத்தின் தற்போதைய தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அங்கு பேசும்போது, தற்போதைய ஜனாதிபதி தேர்தல் மரபுசார் கொள்கைகளை மாற்றும் ஒரு தேர்தல் என்று குறிப்பிட்டார். கொழும்பு போன்ற பெரு நகரத்தை தெரிவு செய்யாமல் ஹம்பாந்தோட்டை போன்ற வெளியிடத்தை சஜித் தெரிவு செய்ததை பார்க்கும்போது அவர் நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் ஆர்வத்துடன் இருப்பதை காணமுடிகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை