சஜித், கோட்டா இருவருக்கும் தமிழரின் வாக்கு கிடைக்காது

இலங்கை ஒரு சிங்கள, பௌத்தர்களின் நாடு என்கின்ற நிகழ்ச்சி நிரலிலே செல்கின்ற கோட்டாபயவாக இருக்கலாம், சஜித் பிரேமதாசவாக இருக்கலாம் இருவருக்குமே தமிழ் மக்களின் வாக்குகள் கிடையாது என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

மன்னாரில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், எங்களுக்கு எதுவுமே தரமாட்டோம் என்கின்றவர்களை நீங்கள் கட்டி அணைக்க முற்படுகின்றீர்கள். கட்டி அணைத்தாலும் பரவாயில்லை அடக்கு முறையாளர்களையும், கொலைகாரர்களையும் ஆதரிக்கின்றார்கள். இரண்டு பகுதியினரும் தாங்கள் தான் அதிக கொலை செய்தோம் என்கின்றார்கள்.

ஒரு பக்கம் கோட்டாபய ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை படு கொலை செய்த கொலையாளி. மறு பக்கம் சஜித் என்கின்றவர் கொலைகளை செய்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பேன் என்கிறார். இன்றைய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை நியமித்ததிற்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ள சூழ்நிலையில் நான் சவேந்திர சில்வாவைத் தான் தொடர்ந்தும் இராணுவத் தளபதியாக வைத்திருப்பேன் என்கின்றார்.

உங்களின் நிலை இதில் யார் சிங்கள பௌத்த வீரன் என்பது தானே தவிர, தமிழர்களைப் பற்றி பேச்சில்லை. சிங்கள, பௌத்த வீரன் யார்?. முதலிடம் சஜித்திற்காக அல்லது கோட்டாவிற்கா? தொல்பொருள் திணைக்களத்திற்கு பொறுப்பாக இருந்து கொண்டு சஜித் பிரேமதாச ஆயிரம் பௌத்த விகாரைகளை வடக்கு கிழக்கிலே கட்டுவேன் என்று கங்கணம் கட்டி செயற்பட்டுவருகிறார்.

கடந்த வருடம் வரவு செலவு திட்டத்திலே 2 ஆயிரத்து 990 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்து அந்த அடிப்படையிலே செயல்படுத்துகின்ற சஜித் 25 மாவட்டங்களிலும் நூறு அடிக்கு மேற்பட்ட புத்தர் சிலைகளை அமைப்பேன் என்றும் பௌத்தர்கள் வாழாத மாவட்டங்களில் புத்தர் சிலைகளை வைப்பதன் நோக்கம் என்ன என்றார்.

மன்னார் குறூப் நிருபர்

Wed, 11/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை