அனுமதி பெறாத தேர்தல் முடிவு ஒலி, ஒளிபரப்புக்கு தடை

தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து அனுமதி பெறப்படாத, உத்தியோகப்பற்றற்ற தேர்தல் முடிவுகளை ஒலி/ஒளிபரப்புச் செய்வதற்கு தடை செய்யப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.  

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை இலத்திரணியில் ஊடகங்கள் மூலம் ஒலி/ஒளிபரப்புச் செய்ய தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து சட்டபூர்வமாக அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.  

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார் அதன் விபரம் வருமாறு,  

அத்தாட்சிப்படுத்திய தேர்தல் முடிவுகளை ஒளி/ஒலிபரப்புச் செய்வதற்கான அனுமதி, தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும். உரிய கொடுப்பனவுகளை மேற்கொண்டு பதிவு செய்துகொள்ளும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மட்டும் அத்தாட்சிப்படுத்திய தேர்தல் முடிவுகளை பாதுகாப்பான கணினி வலையமைப்பொன்றின் ஊடாக ஒன்றன் பின் ஒன்றாக உடனுக்குடன் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அச்சு (செய்திப் பத்திரிகை) ஊடக நிறுவனங்கள், செய்திப் பத்திரிகைகளுக்கு தேர்தல் முடிவுகளை வழங்குவதற்கு கட்டணமெதுவும் அறவிடப்பட மாட்டாது என்பதுடன், அதற்குத் தேவைப்படும் வசதிகளை வழங்க அரசாங்கத் தகவல் திணைக்களம்  நடவடிக்ைக மேற்கொள்ளும்.

வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் 

அந்நிறுவனங்களின் இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் அத்தாட்சிப்படுத்திய தேர்தல் முடிவுகளை வழங்குவதற்கு அவசியமான வசதிகளை வழங்குமாறு அரசாங்கத் தகவல் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, ஒளி/ஒலிபரப்பு உரிமைக்காக பதிவு செய்து கொள்ளும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்குக்கூட தேர்தல் முடிவுகளை கணினி வலையமைப்புகளின் ஊடாக வழங்கும் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் உரிமை தேர்தல் ஆணைக்குழுவைச் சாரும்.   

எம்.ஏ.எம். நிலாம் 

Sat, 11/09/2019 - 09:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை