பெரிய வெங்காய தட்டுப்பாட்டை போக்கும் மாற்றுவழி ஆராய்வு

எதிர்வரும் பண்டிகை காலத்தில் ஏற்படக் கூடிய பெரிய வெங்காய தட்டுப்பாட்டை போக்குவதற்கு மாற்றுவழிகளை முன்னெடுப்பது குறித்து மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசன, கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் பாவனை நலனோம்புகை அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சு தகவல்கள் தெரிவித்தன.

இந்தப் பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உகந்த மாற்று நடவடிக்கையொன்றை முன்னெடுக்க அமைச்சர் திட்டமிட்டுள்ளதாக அறிய வருகிறது. உலக சந்தையில் பெரிய வெங்காயத்தின் தேவையில் 80 வீதத்தை இந்தியாவே வழங்குகிறது.

இலங்கையில் இந்தியாவிலிருந்தே பெரியவெங்காயம் இறக்குமதி செய்வதோடு உள்ளூர் உற்பத்தி நாட்டின் தேவையை நிறைவு செய்ய போதுமானதல்ல என அமைச்சு அதிகாரி ஒருவர் கூறினார்.

ஒக்டோபர், -டிசம்பர் மாதங்களில் இந்திய பெரிய வெங்காய அறுவடை மேற்கொள்கிற போதும் இம்முறை ஏற்பட்ட கடும் மழை காரணமாக பெரிய வெங்காய உற்பத்தி பாதிப்படைந்தது. இதனால், பெரிய வெங்காய ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியது.இதனால், இலங்கையின் பெரிய வெங்காய இறக்குமதி தடைப்பட்டது.இலங்கைக்கு வாராந்தம் 5 ஆயிரம் மெற்றிக் தொன் பெரிய வெங்காயம் தேவைப்படுகிறது எனவும் அறிவிக்கப்படுகிறது. உள்ளூரில் மொத்தத்தேவையில் 30 வீதம்வரையே உற்பத்தி செய்யப்படுவதோடு இதனை 40 வீதம் வரை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த நிலையில், பாக்கிஸ்தான் மற்றும் எகிப்தில் இருந்து இலங்கை பெரிய வெங்காயம் இறக்குமதி செய்த நிலையில், அந்த நாடுகளிலும் பெரிய வெங்காய கையிருப்பு முடிவடைந்து வருவதாக சர்வதேச சந்தை தகவல்கள் தெரிவித்துள்ளன. நெதர்லாந்தில் இருந்தும் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறபோதும் இதற்குக் கூடுதல் செலவு ஏற்படுவதாக அறிய வருகிறது.

உலக சந்தையில் பெரிய வெங்காய விலை அதிகரித்து வரும் நிலையில் ஜரோப்பிய நாடுகளில் இருந்து மஞ்சள் நிற பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தகவல்கள் தெரிவித்தன.(பா)

 

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை