நாட்டின் உயர் கல்வி வளர்ச்சி அதிகரித்துள்ளது

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிம்

நமது நாட்டின் உயர் கல்வி வளர்ச்சி அதிகரித்துக் காணப்படுவதாக, தென்கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முகாமைத்துவத்தில் முதுகலை டிப்ளோமா மற்றும் வியாபார நிர்வாகமாணி முகாமைத்துவ பட்டப் பின்படிப்பு ஆகிய கற்கை நெறி அங்குராப்பண வைபவம் அண்மையில் ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ். குணபாலன் தலைமையில் நடைபெற்ற வைபத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். அந்த வகையில் இக் கற்கை நெறியை பயில்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் இதன் மூலம் கூடிய வருமானத்தை பெறுவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்ய முடியும்.

கல்வியாளர் ஒருவர் தனது தொழிலுடன் மட்டும் நின்று விடாது மேற்படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் உலகளாவிய ரீதியில் பெரும் செல்வாக்கினை பெறுவதோடு உயர்ந்த தொழில் வாய்ப்புக்களையும் பெற முடியும்.

இலங்கையின் உயர்கல்வி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை வழங்கி வரும் இப் பல்கலைக்கழகம் சர்வதேச மட்டத்தில் ஒரு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக மாறி இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு தனது பங்களிப்பினை வழங்கி வருகின்றது.

இப் பல்கலைக்கழகம் பிரதேசம் சார்ந்த இவ்வாறான பட்டப்பின்படிப்புகளை ஆரம்பித்து நாட்டின் உயர் கல்விற்கு பெரும் பங்காற்றி வருவதனை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

இங்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கற்கை நெறிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நீங்கள் செவ்வனே கல்வியினைத் தொடர்ந்து நாட்டின் அபிவிருத்திக்கும் சமூகத்திற்கும் பிரயோசனம் உள்ளதாக செயற்பட வேண்டுமென்றார்.

பிரதம பேச்சாளராக கலந்து கொண்ட கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் எம்.டி.ஏ. லக்ஸ்மன் ரணசிங்கவுக்கு உபவேந்தர் பேராசிரிர் எம்.எம்.எம். நாஜிம் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

இந் நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒலுவில் விசேட நிருபர்

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை