ஏ.டி.பி பைனல்ஸ் டெனிஸ் தொடர்: சம்பியனானார் ஸிட்ஸிபாஸ்

டென்னிஸ் வீரர்களுக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படும் ஏ.டி.பி பைனல்ஸ் தொடர் இனிதே நிறைவு பெற்றுள்ளது.

தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் மட்டும் உள்ள வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரில், இரண்டு குழுக்கள் பிரிக்கப்படும்.

இதில் அண்ட்ரே அகாஸி குழுவில், ரபேல் நடால், டேனில் மெட்வேடவ், ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

பிஜொன் போர்க் குழுவில், நோவக் ஜோகோவிச், ரோஜர் பெடரர், டோமினிக் தியேம், மெட்டியோ பெரிட்டினி ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இத்தொடரில் பல முன்னணி வீரர்கள் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற, எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டிக்கு உலகின் ஆறாம் நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ்சும், உலகின் ஐந்தாம் நிலை வீரரான டோமினிக் தியேமும் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், முதல் செட்டே இரசிகர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டை பிரேக் வரை நகர்ந்த இப்போட்டியில், டோமினிக் தியேம் கடுமையாக போராடி 7--6 என செட்டைக் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து, ஆக்ரோஷமாக மீண்டெழுந்த ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ், செட்டை 6--2 என எளிதாக கைப்பற்றினார்.

இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இதில், இருவரும் விட்டுக் கொடுக்காமல் விளையாட இந்த செட்டும் டை பிரேக் வரை நகர்ந்தது. இந்த செட்டில், இறுதிவரை போராடிய ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ், செட்டை 7--6 என கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இத்தொடரில் முதல் முறை யாக சம்பியன் பட்டம் வென்ற ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ், சம்பினுக்காக வழங்கப்படும் 9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசினையும் பெற்றுக் கொண்டார்.

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை