தேசியப் பட்டியல் பதவியை பலவந்தமாக பறிக்க முற்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை

பலவந்தமாக தேசியப் பட்டியல் பதவியை பறிக்க முற்பட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க தயாராகவே உள்ளேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால் தன்னிடம் நேரடியாக இது குறித்து கலந்துரையாடினால் தேசியப் பட்டியல் பதவியை இராஜனாமாச் செய்ய தயாராகவே உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்காக சு.கவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியின் பதவியை பறிப்பதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

சு.கவின் உறுப்புரிமையையோ அல்லது எனது தேசியப் பட்டியல் பதவியையோ இலகுவாக பறிக்க முடியாது. பலவந்தமாக எனது பதவியை பறிக்க முற்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுப்பேன். ஆனால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்றம் செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால் என்னுடன் நேரடியாக கலந்துரையாடி நான் இராஜினாமா செய்ய தயாராகவே உள்ளேன்.

என்றாலும், இந்த விடயம் தொடர்பில் எனக்கு இதுவரை எவ்வித உத்தியோகப்பூர்வமான கடிதமும் கிடைக்கவில்லை. தமது தேசியப் பட்டியல் பதவியை இராஜினாமா செய்யுமாறு சு.கவின் உயர்பீடம் கோரியுள்ள போதிலும் அவர் மறுத்துள்ள நிலையிலேயே தமது பதவியை பறிப்பது தொடர்பில் அவர்கள் பேச்சுகள் நடத்தியுள்ளனர் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 11/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை