புதிய ஜனாதிபதியின் நல்ல வேலை திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்

புதிய ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை முன்னெடுக்கும் நல்ல வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான ஜென்ரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். எதிர்வரும் தேர்தல்களில் தமது கொள்கையுடன் ஒத்துப்பாேகக்கூடிய எந்த அணியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்-ஷக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். அத்துடன் குறுகிய காலத்துக்குள் அரசியலுக்குவந்த என்னையும்

எமது வேலைத்திட்டங்களையும் ஏற்றுக்கொண்டு என்மீது நம்பிக்கைவைத்து சுமார் 50ஆயிரம் வாக்குகளை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

எமது இந்த பயணத்துக்கு அதிகமான இளைஞர்களை இணைத்துக்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை அவர்களின் கைகளுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும்.

இன,மத பேதமின்றி நாட்டை முன்னேற்ற இணைந்து செயற்படுவதற்கு அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

மேலும் அடுத்த பொதுத்தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம். எமது அணியில் சிறந்த புத்திஜீவிகள் இருக்கின்றனர். ஜனாதிபதி தேர்தலுடன் பொதுத்தேர்தலை ஒப்பிடமுடியாது. அதனால் முறையான அரசியல் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு மக்கள் எமக்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.

பொதுத்தேர்தலில் எமது கொள்கையுடன் ஒத்துப்போகக்கூடிய எந்த கட்சியுடனும் கலந்துரையாடி இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.நாட்டில் தற்போது இருக்கும் மோசமான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே எமது நோக்கமாகும். இதனை மாற்றியமைக்க யார் முன்வந்தாலும் அவர்களுடன் கலந்துரையாட நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அதேபோன்று பாராளுமன்றத்தில் எந்த கட்சி அரசாங்கம் செய்தாலும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் எமது ஆதரவை வழங்குவோம். இதன்போது எமது தனிப்பட்ட நன்மைகளை நாங்கள் ஒருபோதும் கருத்திற்கொள்ளமாட்டோம் என்றார்.

 

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை