'வடக்கின் நீலங்களுக்கிடையிலான சமர்' கிரிக்கெட் போட்டிக்கு மொபிடெல் அனுசரணை

வடக்கின் நீலங்களுக்கிடையிலான சமர் கிரிக்கெட் போட்டிகளின் பிரதான அனுசரணையாளராக மொபிடெல் கைகோர்த்திருந்தது. வடக்கின் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி இடையே இந்த போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2 நாள் போட்டியில் மோதியிருந்த இரு அணிகளும் சிறந்த திறமைகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்தியிருந்தன. நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இந்துக் கல்லூரி அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி, 65.2 ஓவர்கள் நிறைவில், 226/9 எனும் ஓட்டங்களை குவித்திருந்தது. அணியின் சார்பாக, யுகேந்திரன் 134 பந்துகளுக்கு முகங்கொடுத்து 70 ஓட்டங்களை குவித்திருந்தார். கிரிஷாந்த் 105 பந்துகளில் 48 ஓட்டங்களையும், பிரதாப் 56 பந்துகளில் 31 ஓட்டங்களையும், தீக்ஷன் 13 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றதுடன், அபிராஜ் 42 பந்துகளில் 22 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சாளர் சார்பில், இந்துக் கல்லூரியின் பேபிஷான் 27.2 ஓவர்கள் பந்து வீசி 76 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களை வீழ்த்தியிருந்தார். தமிழ்மாறன் 15 ஓவர்கள் பந்து வீசி, 60 ஓட்டங்களுக்கு 3 விக்கட்களையும், தமிழினியன் 6 ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும், வினித் 10 ஓவர்கள் பந்து வீசி 34 ஓட்டங்களை கொடுத்திருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி அணி, 33 ஓவர்களில் 39/5 எனும் ஓட்டங்களை குவித்திருந்தது. லோகரிசியன் 100 பந்துகளுக்கு முகங்கொடுத்து 12 ஓட்டங்களை குவித்திருந்தார். கோமுகிலன் 62 பந்துகளில் 7 ஓட்டங்களையும், பேபிஷான் 13 பந்துகளில் 6 ஓட்டங்களையும் குவித்திருந்தனர். மத்திய கல்லூரி அணியின் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சில் இந்துக் கல்லூரி துடுப்பாட்ட வீரர்களுக்கு இலகுவாக ஓட்டங்களை குவிக்க முடியாத நிலையை அவதானிக்க முடிந்தது.

வடக்கின் நீலங்களுக்கிடையிலான சமர் போட்டியினூடாக திறமைசாலிகள் மற்றும் உறுதியான ஆட்டத்திறன்கள் போன்றன வெளிப்படுத்தப்பட்டிருந்தன. போட்டி நாயகனுக்கான விருது கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியின் யுகேந்திரனுக்கு வழங்கப்பட்டது. போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதையும் இவர் பெற்றுக் கொண்டார். இந்துக் கல்லூரியின் பேபிஷானுக்கு சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது வழங்கப்பட்டிருந்தது. சகல துறை ஆட்டக்காரருக்கான விருது, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் தீக்ஷனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

போட்டியில் சிறப்பாக களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் தர்ஷனுக்கு சிறந்த களத்தடுப்பாளருக்கான விருது வழங்கப்பட்டிருந்தது. இந்த போட்டியை பார்வையிட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் என பலரும் சமூகமளித்திருந்தனர். தொடர்ச்சியாக 10 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வடக்கின் நீலங்களுக்கிடையிலான சமர் போட்டிகளுக்கு கடந்த இரண்டு வருட காலமாக மொபிடெல் அனுசரணை வழங்கி வருகின்றது.

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை