பொலிஸாருக்கு கண்காணிப்பு கமராக்கள்

ஜனாதிபதி தேர்தலை மேற்பார்வை செய்வதற்காக இம்முறை நாடளாவியரீதியில் 71 சிறிய கண்காணிப்பு கமராக்களை பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்தார். தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய

சட்டவிரோதச் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக மேற்படி 71 சிறிய கமராக்களும் 321 ஜெக்கற்றுக்களும் ‘பெப்ரல்’, ‘கபே’ ஆகிய உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸ் திணைக்களத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“எமக்கு வழங்கப்பட்டுள்ள சிறியரக கமராக்களில் இரண்டு வகைகள் உள்ளன. இவற்றுள் சில ஜெக்கற்றின் மேலேயும் சில கமராக்கள் ஜெக்கற்றின் கீழ் அல்லது இடுப்பு பட்டியில் பொருத்தக்கூடியவை. இதன் மூலம் தேர்தல் காலங்களில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகள், ஊர்வலங்கள் என்பவற்றை ஔிப்பதிவு செய்யக்கூடியதாக இருக்கும்,” என்றும் பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்தார்.

இக்கமராக்களை வழங்குவதற்காக நாடு முழுவதிலுமிருந்து தெரிவுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதனை பயன்படுத்தும் முறை தொடர்பில் விளக்கமளிக்கும் பயிற்சிப்பட்டறை நாளை கொழும்பில் நடத்தப்படவுள்ளதென்றும் அவர் கூறினார். தேர்தல் தொடர்பில் இதுவரை 95 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் 44 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் தேர்தல் கண்காணிப்புக்குப் பொறுப்பான பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக்க தர்மசேனவும் கலந்துகொண்டார்.

லக்ஷ்மி பரசுராமன்

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை