தலைவனாவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்?

மக்கள் திலகம் மறைந்து 32ஆண்டுகளான பின்பும் மக்கள் இன்னும்  மறக்காமல்  நெஞ்சில் வைத்து பூஜித்துவர காரணமென்ன? எம்.ஜி.ஆர் தன்னுடைய திரைப்படங்களில் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல கருத்துக்களையும் சிந்தனைகளையும் எடுத்துச் சொல்லும் பாடல்களை பாடியதோடு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அதையே கடைபிடித்து வாழ்ந்து வந்தார். இதனால் தான் இன்றைக்கும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். அவர் அன்றைக்குப் பாடிய பாடல்கள் இன்றைக்கு வாழும் மக்களுக்கு ஒத்துப்போகிறது .

சிறுவர்களும் பெரியவர்களும் தவறான வழியில் செல்லாமல், அவர்களை நல்வழியில் கொண்டு செல்ல எத்தனையோ நன்னெறி நூல்கள் உள்ளன. எத்தனையோ திரைப்படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அந்த திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அந்தப் படங்களில் நடித்து முடித்த உடனே, தங்கள் வேலை முடிந்தது என்று கிளம்பி விடுவதுண்டு. நிஜ வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாக நடந்து வருவதுண்டு. சிகரெட், மது, மாது இம்மூன்றையும் தொடவே கூடாது என்று திரைப்படத்தில் நமக்கெல்லாம் புத்தராக வந்து அறிவுரை சொல்லிவிட்டு, நிஜ வாழ்க்கையில் சதா சர்வகாலமும் மேற்சொன்ன அந்த மூன்று கெட்ட பழக்கங்களோடே குடும்பமும் நடத்தி வருவதுண்டு. 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோ திரைப்படங்களில் என்ன கருத்துக்களை சொன்னாரோ, அதையே தன்னுடைய வாழ்க்கையின் இறுதி வரை கடைபிடித்து வந்தார். அதனால் மக்கள் திலகம் மறைந்து 32ஆண்டுகள் ஆன பின்பும் மக்கள் இன்னும் அவரை மறக்காமல் தங்கள் நெஞ்சில் வைத்து பூஜித்து வருகின்றனர். சின்னஞ்சிறிய வயதிலேயே அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே, எம்.ஜி.ஆர் தான் முதன் முறையாக நடித்த சமூக சீர்திருத்த படமான, திருடாதே படத்தில் இடம் பெற்ற

திருடாதே பாப்பா திருடாதே,

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே,

திறமை இருக்கு மறந்துவிடாதே

என்று அறிவுரை சொல்லி இருக்கிறார். 

நாம் சிறுவர்களாக இருக்கும்போது நம்மை பயமுறத்துவதற்காகவே பேய் பிசாசு பற்றி பயமுறுத்தி வைப்பார்கள் பெரியவர்கள். ஆனால் பேய் பிசாசு எதுவும் கிடையாது என்று சொல்வதற்காகவே அரசிளங்குமரி திரைப்படத்தில் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா என்று தொடங்கும் பாடலில்   

வேப்பமர உச்சியில் நின்னு

பேயொன்னு ஆடுதுன்னு

விளையாடப்போகும்போது

சொல்லி வைப்பாங்க

உன் வீரத்தை கொழுந்திலேயே

கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின்

மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து

வெம்பிவிடாதே

 என்று சிறுவயதிலேயே அவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் பாடியுள்ளார். 

அது மாதிரியே வருங்கால இந்தியா மாணவர்களை நம்பியே உள்ளது என்பதை சொல்லும் வகையில் நம் நாடு படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

நல்ல பேரை வாங்க வேண்டும்

பிள்ளைகளே

 நம் நாடு என்னும் தோட்டத்திலே

நாளை மலரும் முல்லைகளே

என்று பாடியுள்ளார் மேலும், பெற்றால் தான் பிள்ளையா படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்லும் பாடலாக அமைந்திருக்கும்.

 நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

 இந்த நாடே இருக்குது தம்பி

 சின்னஞ்சிறு கைகளை நம்பி

 ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

அன்னையிடம் நீ அன்பை

வாங்கலாம்

 தந்தையிடம் நீ அறிவை

வாங்கலாம்

 இரண்டும் இருந்தால் பேரை

வாங்கலாம்

பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

கடமை இருந்தால் வீரனாகலாம்

கருணை இருந்தால் வள்ளலாகலாம்

பொறுமை இருந்தால்

மனிதனாகலாம்

மூன்றும் இருந்தால்

தலைவனாகலாம்....

இந்த மூன்றும் இருந்தால்

தலைவனாகலாம்

என்று நாட்டுக்கு தலைவனாவதற்கு என்னென்ன தகுதிகள் நமக்கு வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். அதே போல், ஒரு மனிதன் தன்னுடைய கடமை, பொறுப்பை உணர்ந்து நடக்காமல், தான் தோன்றித்தனமாக திரிபவர்களுக்காகவே பணம் படைத்தவன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

 கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே

மனம் போகலாமா

திருந்தாத உள்ளங்கள்

இருந்தென்ன லாபம்

வருந்தாத உள்ளங்கள்

வாழ்தென்ன லாபம்

இருந்தாலும் மறைந்தாலும்

பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று

ஊர் சொல்ல வேண்டும்.

 இந்த பாடலில் இடம்பெற்ற வரிகளைப் போலவே, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், மறைந்து 32 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இன்னும் நம்மிடையே அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால், வெறும் பாடலை பாடியதோடு நிற்காமல், தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் அதையோ கடைபிடித்து வந்தார் என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

Fri, 11/22/2019 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை