சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் தொடர்பில் முழு விசாரணை

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் தொடர்பில் முழு விசாரணை-Switzerland Embassy Abduction-Ruwan Gunasekara Statement

CID நிஷாந்த நாடு கடத்த மறுத்ததாக தெரிவிக்கும் தகவலை சுவிஸ் தூதரகம் மறுப்பு

சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) முழு விசாரணையைத் ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன குணசேகர தெரிவித்தார்.

குறித்த சம்பவம் குறித்து கடந்த புதன்கிழமை (27) முதல் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் அண்மித்த பட அசைவு கெமரா பிரிவினரும், CID யினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில்  CIDயினர் சுவிஸ்லாந்து தூதருக்கு  அறிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் அவசியமான தகவல்களை வழங்கி முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, தூதரகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள், நேற்றையதினம் (29) CID இற்கு வழங்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை (25), சுவிஸ் அலுவலக அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் சுவிஸ் தூதரகம் மற்றும் சுவிஸ்லாந்து அரசாங்கம், இது தொடர்பில் விசாரிக்க இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கையொன்றையும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி குற்றவியல் புலனாய்வுத் துறையும் பொலிஸாரும் இணைந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்வு அறிவித்திருந்தது.

குறித்த சம்பவத்தின்போது, சந்தேகநபர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தியுள்ளதோடு, தாங்கள் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் எனவும் தெரிவித்துள்ளமை தெரியவந்துள்ளதாக தெரிவித்த ருவன் குணசேகர, அவர்களது விசாரணைக்காக அவ்வாறு சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாகவும் அது முற்றிலும் பொய்யான விடயம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம், குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் பொலிஸ் ஆய்வாளர் நிஷாந்த சில்வா, சுவிட்சர்லாந்திற்கு தப்பிச் சென்றமை தொடர்பில் பேசப்பட்டது, இதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக ஊழியர் அச்சுறுத்தப்பட்டிருந்தார்.

நிஷாந்த சில்வா, சுவிட்சர்லாந்திற்கு தப்பிப்பதற்கான விசாக்கள் மற்றும் பிற வசதிகளை வழங்கியமை தொடர்பிலான தகவல்களை பெற குறித்த பெண்ணிடம் சந்தேகநபர்கள் முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுவிஸ் தூதரகம் தங்களது பெண் ஊழியர் ஒருவர் வீதியில் வைத்து கார் ஒன்றில் பலவந்தமாக ஏற்றப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகவும், அவரிடமிருந்து தூதரக தகவல்களை கோரியதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் உடனடியாக அதிகாரிகளுக்கு உரிய முறையில் முறைப்பாடு வழங்கியுள்ளதாகவும், அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த ஊழியர் சுகவீனமுற்றுள்ளதால் இது தொடர்பில் அவரால் எவ்வித அறிக்கையையும் தெரிவிக்க முடியாதுள்ளதாக தூதரகம், தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுவிஸ்லாந்திற்கு சென்றுள்ள, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சுவிஸ் அரசாங்கம் மறுத்ததாக தெரிவிக்கப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மிக விரைவாக விசாரணைகள நடாத்தி, சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Sat, 11/30/2019 - 14:50


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக