சீனாவின் சின்ஜியாங் தடுப்பு முகாம்கள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் கசிவு

சீனாவின் உயர்பாதுகாப்பு சிறை முகாம்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மூளைச்சலவை செய்யப்படுவது குறித்த ஆவணங்கள் முதல் முறை அம்பலமாகியுள்ளது.

தொலைதூர மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள இந்த முகாம்களின் தன்னார்வ கல்வி மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக சீன அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகிறது.

எனினும் பி.பி.சி பெனோராம நிகழ்ச்சியில் வெளியாகி இருக்கும் உத்தியோகபூர்வ ஆவணங்களில், கைதிகள் தடுப்புக் காவலின் கீழ் கற்பித்தல் மற்றும் தண்டனை வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

இந்த ஆவணங்கள் போலியானவை என்று பிரிட்டனுக்கான சீன தூதுவர் நிராகரித்துள்ளார்.

17 ஊடக நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு செய்தியாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு இந்த ஆவணங்களை கசியவிட்டுள்ளது.

தீவிரவாதத்தை தடுப்பது மற்றும் மறுகல்வியூட்டலுக்காக தன்னார்வ அடிப்படையில் சின்ஜியாங் பிராந்தியம் எங்கும் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்கள் பற்றி சீன அரசாங்கத்தின் கூற்றை பொய்யாக்குவதாக இந்த ஆவணங்கள் உள்ளன.

இந்த முகாம்களில் எந்த விசாரணையும் இன்றி உய்குர் முஸ்லிம் சமூகத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் ஒரு மில்லியன் பேர் இந்த தடுப்பு முகாம்களில் இருப்பதாக நம்பப்படுகிறது.

சீனா கேபிள்கள் ஊடாக இந்த ஆவணங்களை பெற்றதாக புலனாய்வு செய்தியாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதில் 2017 ஆம் ஆண்டு அப்போதைய சின்ஜயாங் பிராந்திய கம்யூனிச கட்சி பிரதிச் செயலாளர் சு ஹய்லுன் அனுப்பிய ஒன்பது பக்க குறிப்பாணை ஒன்றும் உள்ளடங்குகிறது.

கடுமையான ஒழுக்க நடவடிக்கைகள், தண்டனைகள் மற்றும் தப்பிக்க முடியாத உயர் பாதுகாப்பு சிறை ஒன்றாக இந்த முகாம்கள் நடத்தப்படுவது அந்த குறிப்பாணையில் தெளிவாகத் தெரிகிறது. தடுப்புக் காவலில் இருக்கும் ஒவ்வொருவரின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட படுக்கை, வரிசை நிலை, வகுப்பறை இருக்கை, திறன் பணிகளில் நிர்ணயிக்கப்பட்ட நிலைகள் உள்ளன. இதனை மீறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றி மற்றொரு ஆவணம் காட்டுகிறது. 2017 இல் வெறும் ஒரு வாரத்திற்கு தெற்கு சின்ஜியாங்கில் இருந்து 15,000 பேர் வரை இந்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

உய்குர் இன மக்கள் டி.என்.ஏ மாதிரிகளை வழங்க மறுப்பது, தங்கள் மொழியில் பேசுவது, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காரணங்களுக்காக கைது செய்யப் படுவதாக மனித உரிமை செயற்பாட்டு குழுக்கள் தெரிவிக்கின்றனர். தமது சிந்தனை மாற்றங்கள், கல்வி மற்றும் பயிற்சி, ஒழுக்கரீதியாக கீழ்படிதல் ஆகிய காரணிகளுக்காக இந்தத் தடுப்பு முகாம்களில் இருப்பவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுவதாக வெளியாகி இருக்கும் குறிப்பாணையின் மூலம் தெரியவருகிறது.

ஷின்ஜியாங் பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 45 வீதம் பேர் உய்குர் இனத்தவர்களாவர்.

அவர்கள் கலாசார ரீதியாகவும், இன ரீதியாகவும் தங்களை மத்திய ஆசிய நாடுகளுடன் இணைத்து கொள்கின்றனர். அவர்களின் மொழி துருக்கியை போன்றது.

கடந்த சில தசாப்தங்களாக சீனாவின் பெரும்பான்மை இனக் குழுவான ஹன் மக்கள் ஷின்ஜியாங் பிராந்தியத்துக்கு வர ஆரம்பித்ததால் உய்குர் இன மக்கள் தங்கள் கலாசாரத்துக்கும், வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக உணர்கின்றனர். திபெத்தை போன்று சீனாவிடமிருந்து தன்னாட்சி பெற்ற ஒரு பிராந்தியமாக ஷின்ஜியாங் உள்ளது.

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை