பதினேழு மாவட்டங்களில் சஜித்தின் வெற்றி உறுதி

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பதினேழு மாவட்டங்களில் எமது புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் எமது வெற்றிக்காக உழைப்போம் என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

கொழும்பு மட்டக்குளி, பாலத்துறை சந்தியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

நாட்டு மக்களின் நலன், எதிர்காலம் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான எமது வேலைத்திட்டங்களின் முன்னெடுப்பு தொடர்பாகவுமே உரைகளை நிகழ்த்துகிறோம். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ வெங்காயம், வெள்ளைப்பூடு விலை தொடர்பாகவே மக்கள் முன் கதை விடுகிறார். எமது வெற்றியின் உறுதியால் மஹிந்த ராஜபக்ஷ இன்று வெங்காய வியாபாரியாக மாறிவிட்டார். இத்தேர்தலில் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதி ஒருவரையே நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலாக எமது கூட்டணி முன் வைத்தவர் நானே.

2010, 2015 இன் ஜனாதிபதி தேர்தலில் இக்கட்சிக்கு வெளியே உள்ளவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தினோம். இன்று ஐ. தே. கட்சியின் உபதலைவர் ஜனாதிபதி வேட்பாளராக உள்வாங்கப்பட்டுள்ளார். இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்ற, அரசு அனைத்தும் எமது வசமாக உள்வாங்கப்படும் நாள் இம் மாதம் 16 ஆம் திகதியேயாகும். அந்நாள் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் பெரும் வெற்றியை தொடுவார். இவ்வெற்றி பெரும் வெற்றியாக இருக்கும்.

முதலில் அரச ஊழியர்களின் தபால்மூல வாக்களிப்பில் இவரின் வெற்றிக்கான உதயம் உருவாகும். எமது அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு அரச ஊழியர்களின் வாக்குகள் பெரும் அளவில் கிடைக்கப்பெறும். இவரின் வெற்றிக்காக தமிழ், சிங்களம், முஸ்லிம் என இன ரீதியாக பார்வையிடாது அனைவரும் இணைந்து நவம்பர் 16 இல் எமது வேட்பாளரை வெற்றிபெற வைப்போம்.

எமது வேட்பாளர் ஏழைகளின் துயரத்தை தெரிந்தவர். ஏழை மக்களின் அனைத்து வலிகளையும் அறிந்த அனுபவசாலி. ஏழை மக்களுக்கான நலன்புரித் திடடங்களை முன்னெடுப்பதில் பெரும் அர்ப்பணிப்பாகவுள்ளார். ராஜபக்ஷவினர் குடும்பமாக இணைந்தே செயல்படுகின்றனர். அவர்கள் கட்சிக்குள் குடும்ப உறுப்பினர்களே பதவிகளை வகிக்கின்றனர். நாம் இலங்கையர் என்ற தேசிய உணர்வுடன் செயல்படுகிறோம். எம்மிடம் இன, மத வேறுபாடு இல்லை. அனைவரும் இங்கு இணைந்தே ஒரு குடும்ப உறுப்பினர்களாக வெற்றிக்காக உழைக்கிறோம். தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் நேரம் மாலை ஐந்து மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆதலால் நவம்பர் 16இல் காலை வேளையிலேயே வாக்களித்து சஜித் பிரேமதாசவை 17 ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் அமர்த்துவோம்.

வட கொழும்பு தினகரன் நிருபர்

Sat, 11/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை