சுவிட்சர்லாந்து, டென்மார்க் அணிகள் தகுதி

ஐரோப்பிய கால்பந்து :

தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் அணிகள் ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு அடுத்து பிரபலம் பெற்றது ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியாகும்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரான்சில் நடந்த போட்டியில் போர்த்துக்கல் சம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப்போட்டியில் 1--0 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தியது.

16-வது ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி (யூரோ) அடுத்த ஆண்டு (2020) ஜூன் 12 ம்திகதி முதல் ஜூலை 12-ம் திகதி வரை நடக்கிறது.

முதல் முறையாக 12 நாடுகள் இந்தப்போட்டியை நடத்துகின்றன. இந்தப்போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன.

‘டி’ குரூப்பில் நடந்த ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து- ஜிப்ரால்டர் அணிகள் மோதின. இதில் சுவிட்சர்லாந்து அணி 6--1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் சுவிட்சர்லாந்து அந்த பிரிவில் 5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று தகுதி பெற்றது. 4-வது முறையாக அந்த அணி முன்னேறி உள்ளது.

டூப்ளின் நகரில் நடந்த ஆட்டத்தில் டென்மார்க்- அயர்லாந்து அணிகள் மோதின.

இந்த ஆட்டம் 1--1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இதன்மூலம் டென்மார்க் 16 புள்ளியுடன் தகுதி பெற்றது.

அந்த அணி 8-வது முறையாக நுழைந்துள்ளது.

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கு இதுவரை 19 அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதன் விவரம்:-

பெல்ஜியம், இத்தாலி, ரஷ்யா, போலந்து, உக்ரைன், ஸ்பெயின், பிரான்ஸ், துருக்கி, இங்கிலாந்து, செக்குடியரசு, பின்லாந்து, சுவீடன், குரோஷியா, ஆஸ்திரியா, நெதர்லாந்து, ஜெர்மனி, போர்த்துக்கல், சுவிட்சர்லாந்து, டென்மார்க்.

Wed, 11/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை