காற்று மாசடைதல் சற்று குறைந்த போதும் அதிகரிக்கும் சாத்தியம்

வளிமண்டலத்திலுள்ள தூசு துணிக்கைகளின் எண்ணிக்கை நேற்று மாலை முதல் ஒப்பீட்டளவில் குறைந்து செல்கின்றபோதும் எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் திடீரென அதிகரிக்கக்கூடிய சாத்தியம் எதிர்பார்க்கப்படுவதாக

கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி எச்.டி பிரேமசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

இலங்கைக்கு வடக்கே இந்தியாவுக்கூடாக வரும் காற்று தற்போது வங்காள விரிகுடாவுக்கூடாக செல்வதனால் எதிர்வரும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நாட்டுக்குள் வரும் தூசு துணிக்கைகளின் அளவு குறைவடையுமென்றும் அவர் விளக்கமளித்தார்.

தற்போது ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான்,பங்காளதேஷ், சீனா ஆகிய நாடுகள் இப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன.

இலங்கைக்கு வடக்கேயிருந்து வரும் காற்றுக்கூடாகவே இத் தூசு துணிக்கைகள் நாட்டுக்குள் வந்துள்ளன. அதற்கான காரணத்தை திட்டவட்டமாக கூறமுடியாதுள்ளது.

எனினும் கடந்த இரண்டு நாட்களுடனும் ஒப்பிடும்போது தற்போது வளிமண்டலத்திலுள்ள தூசியினளவு சற்று குறைவடைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

எனினும் தொடர்ச்சியாக நாம் இதனை அவதானித்து வருகின்றோம்.

வளிமண்டலத்திலுள்ள தூசியினளவு மீண்டும் அதிகரித்தால் நாம் அது குறித்து பொதுமக்களுக்கு அறியத்தருவோம். இவ்வாறான நாட்களில் மூக்கையும் வாயையும் மூடி கட்டிக்கொள்வது சிறந்தது.

அதனைத்தவிர வெளியிடங்களுக்குச் சென்று விளையாடாமல் கூடுமானவரை உள்ளே இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வாகனங்களின் பாவனையை குறைக்குமாறும் பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

 

லக்ஷ்மி பரசுராமன்

Fri, 11/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை