புதிய ஜனாதிபதியானார் கோட்டாபய ராஜபக்‌ஷ

14 இலட்சம் மேலதிக வாக்குகளால் அமோக வெற்றி

17 மாவட்டங்களில் பொதுஜன பெரமுன பெருவெற்றி

வடக்கு, கிழக்கில் சஜித்துக்கு கூடுதல் வாக்குகள்

ஷம்ஸ் பாஹிம், ஸாதிக் ஷிஹான், லக்ஷ்மி பரசுராமன், சுப்பிரமணியன் நிஷாந்தன்

சுமார் 69 இலட்சம் வாக்குகளை பெற்று இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 14 இலட்சம் மேலதிக வாக்குகளை பெற்று அவர் அமோக வெற்றியீட்டியதோடு இதனை தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

வரலாற்றில் முதன்முறையாக அதிகூடுதலாக 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேம தாசவிற்குமிடையில் கடுமையான போட்டி நிலவியது. இதன் போது சஜித் பிரேமதாச 55 இலட்சம் வாக்குகள் பெற்றதோடு இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 41.99 வீதமாகும்.

தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்‌ஷ 17 மாவட்டங்களிலும் சஜித் பிரேமதாச 5 மாவட்டங்களிலும் வெற்றியீட்டியுள்ளனர். தபால் மூல வாக்களிப்பில் 18 மாவட்டங்களை கோட்டாபய ராஜபக்‌ஷ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கூடுதலான தேர்தல் தொகுதிகளை சஜித் பிரேமதாச வென்ற போதும் 160 தொகுதிகளில் அநேகமான தொகுதிகளை கோட்டாபய ராஜபக்‌ஷவே வென்றுள்ளது முக்கிய அம்சமாகும்.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பிற்பகல் வரை தேர்தல் முடிவுகள் வெளியானதோடு இறுதித் தேர்தல் முடிவுகள் நேற்று பிற்பகல் தேர்தல் ஆணையாளரினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. செல்லுபடியான மொத்த வாக்குகளில் பாதிக்கு மேல் (52.25 வீதம்) பெற்ற கோட்டாபய ராஜபக்‌ஷ ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த ஆணைக்குழுவின் தலைவர் அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய இதனை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் கடந்த சனிக்கிழமை 22 தேர்தல் மாவட்டங்களில் நடைபெற்றதோடு நாடுமுழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 12 ஆயிரத்து 845 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு நடைபெற்றது. இம்முறை தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிட்டதோடு பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷ ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தி வேட்பாளராக களமிறங்கினார்.

முன்னாள் அமைச்சர்கள் எம்.பிக்கள்,முன்னாள் இராணுவத் தளபதி உட்பட 35 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிட்டனர். காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் நள்ளிரவில் முதலாவது தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என ஆணைக்குழு தலைவர் முன்னதாக அறிவித்திருந்தார்.

மாலை 5.15 மணிமுதல் நாடுபூராவும் அமைக்கப்பட்ட 1,550 நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

முடிவுகள் தாமதம்

இந்த நிலையில் இரத்தினபுரி,கேகாலை மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட சிறுவௌ்ளத்தினால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஆணைக்குழு தலைவர் நள்ளிரவு 12 மணியளவில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். தேர்தல் முடிவுகள் தாமதமான நிலையில் சமூக வலைத்தளங்களினூடாக உத்தியோகபற்ற முடிவுகள் வெளியாகியிருந்தன.இந்த நிலையில் நள்ளிரவு ஒருமணியளவில் மீண்டும் அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர் அந்த அறிவிப்புகளை முற்றாக நிராகரித்தார்.

முதலாவது முடிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு அதிகாலை 1.56 மணியளிவில் வெளியிடப்பட்டது. காலி மாவட்ட தபால் மூல வாக்கு முடிவே இவ்வாறு அறிவிக்கப்பட்டதோடு அடுத்து நல்லூர் தேர்தல் தொகுதி முடிவு வெளியானது.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பிற்பகல் வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை வகித்தாலும் காலை பெறுபேறுகள் அறிவிக்கப்படும் போது இரு பிரதான வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. ஆரம்பத்தில் வட மாகாணத்திலுள்ள தேர்தல் தொகுதிகளின் முடிவுகளே கூடுதலாக அறிவிக்கப்பட்டதோடு பெரும்பாலான தபால் மூல வாக்குகளும் அதிகாலையாகும் போது வெளியிடப்பட்டிருந்தன.

தபால் மூல வாக்கு

தபால் மூல வாக்களிப்பில் கொழும்பு,கம்பஹா. களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, மொணராகலை, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, புத்தளம்,குருணாகல், அநுராதபுரம்,பொலன்னறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மாவட்டங்களை கோட்டாபய ராஜபக்ஷ வென்றதோடு திருகோணமலை, திகாமடுல்ல, வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களை மாத்திரமே சஜித் பிரேமதாச வெற்றி பெற்றார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அதிகமான தொகுதிகளில் சஜித் பிரேமதாச கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். மலையகம் மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் அவர் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றாலும் கூடுதலாக தொகுதிகளை கோட்டாபய ராஜபக்ஷவே கைப்பற்றியிருந்தது முக்கிய அம்சமாகும். சில தொகுதிகளில் இரு வேட்பாளர்களும் சிறிய வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறைந்த வித்தியாசத்தில் வெற்றி

உடுநுரவ தொகுதியில் 128 மேலதிக வாக்குகளினாலும் காலி தொகுதியில் 140 மேலதிக வாக்குகளினாலும் சஜித் பிரேமதாச வென்றியீட்டியிருந்தது விசேட அம்சமாகும். வெளிமடை, வலப்பனை,வத்தளை,ஹேவாஹெட்ட,மாத்தளை போன்ற தொகுதிகளில் அவர் சுமார் 1,000 வாக்கு வித்தியாசத்திலும் தெல்தெனிய,ஹாலிஎல,சேறுவில,நாவலபிடி போன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் 3 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றார்.

இதேவேளை, பேருவளை தொகுதியை 1,000 வாக்குகளினாலும் ஹரிஸ்பத்துவ தொகுதியை 2,000 வாக்கு வித்தியாசத்தினாலும் கொலன்னாவை தொகுதியை 3,000 வாக்குகளாலும் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.

பாரிய வித்தியாசத்தில் வெற்றி

சஜித் பிரேமதாச, நுவரெலிய- மஸ்கெலியவில் சுமார் 99 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும் பொத்துவில் தொகுதியை 80 ஆயிரம் வித்தியாசத்திலும் சம்மாந்துறை தொகுதியை 50 ஆயிரம் வித்தியாசத்திலும் அம்பாறை தொகுதியை 47 ஆயிரம் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கல்குடாவில் 39 ஆயிரம் மேலதி வாக்குகளினாலும் அவர் வெற்றி பெற்றார்.

இது தவிர கிளிநொச்சி தொகுதியில் அவர் 87 வீதமான வாக்குகளையும் முல்லைதீவு,நல்லூர் ஆகிய தொகுதிகளில் 86 வீதமான வாக்குகளை பெற்றதோடு வடக்கிலுள்ள பல தொகுதிகளில் 75 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி

இந்தத் தேர்தலில் 57 ஆயிரம் மேலதிக வாக்குகளினால் கடுவெல தொகுதியை கோட்டாபய ராஜபக்ஷ வென்றதோடு வெள்ளவாயவில் 56,000 மேலதிக வாக்குகளினால் அவர் வெற்றி பெற்றிருந்தார். கெஸ்பேவ தொகுதியை அவர் 62,000 மேலதிக வாக்குகள் பெற்று கைப்பற்றியதோடு கம்பஹா தொகுதியில் 53,000 மேலதிக வாக்குகள், மஹரகம 50 ,000 மேலதிக வாக்குகள், ஜா-எல 40,000 மேலதிக வாக்குகள் பெற்று கோட்டாபய வென்றிருந்தார். கம்புருபிடி தொகுதியில் அவர் 71 வீத வாக்குகளை கைப்பற்றியிருந்ததோடு அக்குறஸ்ஸ, ஹபராதுவ, அம்பலங்கொட, தொம்பே, பலபிட்டிய, உட்பட பல தொகுதிகளில் அவர் 65 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறாத தொகுதிகளை கூட இம்முறை கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றது விசேட அம்சமாகும்.

மாவட்ட முடிவுகள்

22 தேர்தல் மாவட்டங்களில் சஜித் பிரேமதாச 5 மாவட்டங்களை வென்ற அதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ 17 மாவட்டங்களின் வெற்றியை பதிவு செய்திருந்தார். கடந்த முறை ஜ.தே.க தலைமையிலான கூட்டணியில் மைத்திரிபால சிரிசேன வெற்றியீட்டிய கொழும்பு, கம்பஹா, கண்டி, மட்டக்களப்பு, புத்தளம், பதுளை, போன்ற தொகுதிகளில்இம்முறை கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டினார். இதுதவிர களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, மொணராகலை,பொலன்னறுவை, அநுராதபுரம், குருணாகல் ஆகிய மாவட்டங்களையும் அவர் கைப்பற்றி பெரு வெற்றி பெற்றுள்ளார்.

குறிப்பாக அவர் கம்பஹா மாவட்டத்தை 3 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிக வித்தியாசத்திலும் குருணாகல், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களை 2 இலட்சத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் வென்று சாதனை படைத்துள்ளமை முக்கிய அம்சமாகும்.

இறுதி முடிவுகளின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சத்து 24,255 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 55 இலட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகளையும பெற்றதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார். மூன்றாவதாக தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார 4 இலட்சத்து 18,553 வாக்குகளை பெற்றுள்ளார். அடுத்ததாக கூடுதல் வாக்குகளை முறையே மகேஷ் சேனாநாயக்க, எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் பெற்றுக் கொண்டதோடு ஏனையோர் குறைந்தளவு வாக்குகளையே பெற்றுள்ளனர். (35 வேட்பாளர்களும் பெற்றுக்கொண்ட வாக்குகள் தொடர்பான முழு விபரத்தை 14 ஆம் பக்கம் பார்க்கலாம்).

இதே ​வேளை எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தபால் மூல வாக்கெடுப்பில் சகல மாவட்டங்களிலும் வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வேளை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் பதவி ஏற்கிறார்.(பா)

 

Mon, 11/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை