ஊடகத்துறைக்கு இன்று எல்லையற்ற சுதந்திரம்

இன்றைய அரசாங்கம் ஊடகத்துறைக்கு எல்லையற்ற சுதந்திரம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, அரசு பதவிக்கு வந்த நாள் முதல் இன்று வரை மூவாயிரத்திற்கும் அதிகமான ஆர்ப்பாட்டங்களையும், எதிர்ப்புகளையும் ஊடகங்கள் அரசுக்கு எதிராக மேற்கொண்டபோதும் ஒரு ஊடகவியலாளர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

கடந்த ஆட்சியில் போன்று எமது அரசாங்கம் கொலை கலாசாரத்தை ஊடகத்துறையினர் மீது கட்டவிழ்த்துவிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஊடகத்துறையினரை நேற்றைய தினம் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏட்ஜ் ஹோட்டலில் சந்தித்தார். இலங்கை ஜனநாயக ஊடகத்துறை சார்ந்தோர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகத்துறை சார்ந்தோரின் விஷேட மாநாட்டிலேயே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.​

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்றைய தினம் இந்த இடத்தில் ஊடகவியலாளர்களான உங்களைச் சந்திக்கின்றபோது கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும் அவசியம் எனக்குள் எழுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஊடகத்துறையினர் எதிர்கொண்ட சவால்களை திரும்பிப்பார்க்கின்றேன். லசந்த விக்ரமதுங்க முதல் 300 க்கும் மேற்பட்ட ஊடகத்துறையினர் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் கொலை  செய்யப்பட்டுள்ளனர். தெற்கில் மட்டுமல்ல வட, கிழக்கிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அதேபோன்று தாக்கப்பட்டவர்களும் உள்ளனர்.

இந்த இடத்தில் என்னால் அவர்களைப் பட்டியலிட்டுக் கூறமுடியும். மஹிந்த ஆட்சியில் ஜனநாயகத்துக்கு இடமில்லை என்ற நிலை வந்தபோதுதான் அந்த அரசிலிருந்து வெளியேற தீர்மானித்தேன். ஊடகத்துறையினருடன் எனக்கு சுமார் மூன்று தசாப்தத்துக்கும் கூடுதலான காலம் தொடர்புகள் உண்டு. இங்கிருப்பவர்களில் நிறையப் பேரை என்னால் பெயர் கூறி அழைக்க முடியும். அவ்வளவு நெருக்கமான உறவை நான் ஊடகவியலாளர்களுடன் பேணி வருகின்றேன்.

இந்தத் தேர்தல் எமக்கு மிக முக்கியமானதாகும். ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்குமிடையிலான தேர்தலாகவே பார்க்க வேண்டியுள்ளது. 2015ஆல் நாம் வென்றெடுத்த ஜனநாயகத்​ைத சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மீண்டும் அராஜகத்தின் பக்கம் நாட்டைத் தள்ளிவிட முடியாது எமக்குரிய இன்றைய ஒரே தெரிவு சஜித் பிரேமதாச மட்டுமேயாகும் என்றார்.

 

எம்.ஏ. எம். நிலாம்- , லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை