மெஸ்ஸியின் ஹட்ரிக் கோலினால் பார்சிலோனா அணி இலகு வெற்றி

லியோனல் மெஸ்ஸியின் இரு அபார ப்ரீ கிக்குகள் உட்பட ஹெட்ரிக் கோல் மூலம் செல்டா விகோ அணியை 4–1 என தோற்கடித்த பார்சிலோனா லா லீகாவில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

கேம்ப் நூவில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற போட்டியின் ஆரம்பத்தில் பெனால்டி உதை மூலம் மெஸ்ஸி கோல் பெற்றார். ஜூனியர் பயர்போ பரிமாற்றிய பந்து பெனால்டி பகுதிக்குள் ஜோசப் ஐரூவின் கைகளில் பட்டதாலேயே 28 ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு அந்த ஸ்பொட் கிக் கிடைத்தது.

எனினும் லுௗகாஸ் ஒலாசாவின் ப்ரீ கிக் உதவியோடு செல்டா விகோ அணி பதில் கோல் திருப்பியது. எனினும் மெஸ்ஸி நான்கு நிமிடங்கள் கழித்து அதேபோன்ற ஒரு முயற்சியில் கோல் ஒன்றை போட்டார்.

முதல் பாதியில் பார்சிலோனா 2-1 என முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது பாதியில் மீண்டும் செயற்பட்ட மெஸ்ஸி மற்றொரு ப்ரீ கிக் மூலம் கோலை பெற்றார். தொடர்ந்து 85 ஆவது நிமிடத்தில் செர்ஜியோ புஸ்குட்ஸ் பார்சிலோனா சார்பில் நான்காவது கோலை புகுத்தினார்.

இதன் மூலம் கோல் வித்தியாசத்தில் பார்சிலோனா முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது. எனினும் அந்த அணி இரண்டாவது இடத்தில் இருக்கும் ரியல் மெட்ரிட்டுடன் 25 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளது.

இந்த இரு அணிகளுக்கும் இடையில் எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி எல் கிளசிகோ போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 11/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை