நுகர்வோரை பாதுகாக்கும் நிறுவனம் பாவனையாளர் அதிகார சபையே

புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இலங்கையில் உள்ள நுகர்வோரை பாதுகாக்கும் ஒரே ஒரு நிறுவனமாகுமென பாவனையாளர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி தெரிவித்தார்.

பாவனையாளர் அதிகார சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாவனையாளர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் ஆலையடிவேம்பு கண்ணகி புரம் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பாவனையாளர்களின் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடமளிக்கும் வகையில் பாவனையாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உற்பத்தியாளர் அல்லது வியாபாரி பாவனையாளர் பாதுகாப்புச் சட்டத்தை மீறினால் அவர்களுக்கெதிராக நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது மக்கள் வியாபார நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஆகக் கூடிய சில்லறை விலை, தொகுதி இலக்கம், உற்பத்தித் திகதி, காலவதியாகும் திகதி என்பவற்றை அவதானித்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

நுகர்வோர் நலன் கருதி வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல்விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பொருட்களை விற்பனை செய்தல் பாரிய குற்றமாகும்.

இதனை பொது மக்கள் பாவனையாளர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து சட்டரீதியற்ற இறக்குமதி செய்யப்படும் முகப்பூச்சுக்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். முகப்பூச்சுக்களை அதிகமாக பாவித்தால் புற்று நோய் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளது.

உள்ளுரில் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களில் அதிகமாக கலப்படம் செய்யப்பட்டு வருகின்றது. பாவனையாளர்கள் முகங்கொடுக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உதவி வருகின்றது. நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

மாணவர்கள் நுகர்வோர் சட்டதிட்டங்களை அறிந்து கொள்வதோடு உங்களது பெற்றோர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். அதற்காக வேண்டியே இவ்வாறான விழிப்புணர்வுகள் பாடசாலை மட்டத்தில் நடைபெற்று வருகின்றதென்றார்.இந் நிகழ்வில் புலனாய்புவு உத்தியோகத்தர் ரீ. சுதர்சனும் கலந்து கொண்டார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

Fri, 11/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை