நேரகாலத்தோடு வாக்களியுங்கள்

சரியாக பி.ப 5 மணிக்கு வாக்குப்பெட்டிகளுக்கு சீல்

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் இன்று சனிக்கிமை (16) காலை 7 மணிக்கு ஆரம்பமாகின்றது. இம்முறை அதிக வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடுவதன் காரணமாக தேர்தல் நடைபெறும் காலம் சுமார் ஒரு மணி நேரத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தாலும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் சிரமங்களை தவிர்ப்பதற்காக நேர காலத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் முண்டியடித்துக் கொண்டிருந்தாலும், மாலை சரியாக 5 மணிக்கு வாக்கெடுப்பை முடிவுக்கு கொண்டு வந்து வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைப்பதென தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியான தீர்மானம் மேற்கொண்டிருப்பதனால் மாலை வரை காத்திருப்பதை தவிர்த்து காலையிலேயே வாக்குகளைச் செலுத்த முன்வருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை நிரூபிக்கும் வகையில் தேசிய அடையாள அட்டை அல்லது அதற்கு ஈடான வேறு அடையாள அட்டையுடன் வாக்காளர் அட்டையையும் தவறாது உடன் எடுத்துச் செல்வதன் மூலம் அமைதியானதும் நீதியானதுமான முறையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேசத்தின் உன்னிப்பான அவதானத்துக்கு மத்தியில் இன்றைய தினம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள் நாடு முழுவதுமுள்ள 12 ஆயிரத்து 845 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அதிக வேட்பாளர்கள் மற்றும் நீண்ட வாக்குச் சீட்டு காரணமாக இம்முறை தேர்தல் பெறுபெறுகள் வழமையிலும் சற்று தாமதமாகவே வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று மாலை 5.15 மணிக்கு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நள்ளிரவுக்குப் பின்னர் முதலாவது தேர்தல் பெறுபேறாக தபால்மூல வாக்கின் முடிவுகள் வெளியிடப்படும்.

அதேநேரம் முழுமையான தேர்தல் முடிவும் புதிய ஜனாதிபதி யாரென்ற உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் நாளை மறுதினம் 18 ஆம் திகதி திங்கட்கிழமையன்றே அறிவிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி

வேட்பாளர்கள்

இம்முறை தேர்தலில் ஒரு பெண் , இரண்டு பெளத்த மதகுருமார் உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுதந்திரத்தின் பின்னர்

 

நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல்களில் ஆகக்கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும். அத்துடன் மிக நீண்ட வாக்குச் சீட்டு, அதிக எண்ணிக்கையான வாக்குப்பெட்டிகள், அதிக செலவு, கூடுதல் கண்காணிப்பாளர்கள், வழமையான யானை மற்றும் கை சின்னங்கள் இல்லாமை, நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் போட்டியிடாமை, குறைந்தளவிலான தேர்தல் வன்முறைகள் போன்ற சிறப்பம்சங்களுக்கு மத்தியில் இம்முறை தேர்தல் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

35 வேட்பாளர்களின் சின்னங்களையும் உள்ளடக்கி முதற்தடவையாக மிக நீண்டதான 26 அங்குல (66 சென்ரிமீற்றர்) நீள வாக்குச் சீட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களின் வசதிகருதி வாக்களிப்பு நடைபெறும் கால எல்லை ஒரு மணி நேரத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டின் நீளம் காரணமாக வழமைக்கும் மாறாக பெறுபேறுகள் வெளிவரும் நேரம் தாமதிக்கலாம் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களின் எண்ணிக்கைகளும் இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளன. பூட்டுகளுடன் கூடிய விசாலமான கார்ட்போர்ட் வாக்குப் பெட்டிகளும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக தயார் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 1550 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தேர்தல் கடமைகளுக்காக 5800 பஸ்களை ஈடுபடுத்தியுள்ளதாக இ.போ.ச அறிவித்துள்ளது.

தேர்தல் கடமை

தேர்தல் கடமையில் சுமார் இரண்டு இலட்சம் அரச அதிகாரிகளும் 60 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு அவசர நிலையில் ஈடுபடுத்துவதற்கான இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஒக்டோபர் 31 மற்றும் நவம்பர் முதலாம் திகதிகளில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.பொலிஸார்,தேர்தல் அலுவலர்கள்,மாவட்ட செயலக அதிகாரிகள் போன்றோர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களித்தார்கள்.இம் முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 6 இலட்சத்து 59,514 பேர் விண்ணப்பித்திருந்தார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடு

தேர்தலுக்கான பிரசார பணிகள் யாவும் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினமும் நேற்றும் அமைதி காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை தேர்தல் முடிவுகள் முடிவடைந்து ஒருவாரங்கள் செல்லும் வரை கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொலிஸார் இன்று முதல் நாடுபூராகவும் கடமையில் ஈடுபடயிருப்பதோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் கூடுதலான பொலிஸார் ஈடுபடுத்தப்படுவதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியது. இது தவிர விசேட தேர்தல் பாதுகாப்பு கடமையில் 9 பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு அவர்கள் கிளிநொச்சி,முல்லைதீவு, மன்னார், மட்டக்களப்பு,மாத்தறை,பொலனறுவை, கோகாலை,மாத்தளை ,மொனராகலை ஆகிய மாவட்டங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதுதவிர தேர்தல் பாதுகாப்பு தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இம்முறை குறைந்தளவு தேர்தல் வன்முறைகளே பதிவாகியுள்ளதோடு இந்த நிலைமைய பேண ஒத்துழைக்குமாறு சகல கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடம் பாதுகாப்பு தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் கண்காணிப்பு

தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, தென்னாபிரிக்கா, மாலைதீவு, பூட்டான், பிலிப்பைன்ஸ், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆறாயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் ஏற்கனவே கண்காணிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளதோடு நேற்றும் இன்றும் கூடுதலான கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளருக்கு அறிவுறுத்தல்

தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியான ஏதாவது ஒரு அடையாள அட்டையை கட்டாயம் எடுத்துவர வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவித்துள்ளது. அடையாள அட்டையில்லாத எவருக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை பெற விண்ணப்பித்தும் அடையாள அட்டை கிடைக்காதோர் ஆட்பதிவு திணைக்கள கடிதத்துடன் அல்லது கிராம சேவகரினூடாக விசேட அடையாள அட்டை பெற்று வாக்களிக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டு நீளமாக இருப்பதால் வாக்களிப்பிற்கு கூடுதல் காலம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறும் வாக்காளர்களிடம் கோரப்பட்டுள்ளது. 5மணிக்கு வாக்குச்சாவடியில் வரிசையில் இருந்தாலும் கூட வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை வாக்களிப்பு தினத்தில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிக்கும் போது புகைப்படம் பிடிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்களிக்கும் படங்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினூடாக விநியோகிக்கப்படும் என தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக்க களுவெவ அறிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்பு

தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதி அரசாங்க அச்சகத் திணைக்களத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.இதன் பிரகாரம் கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையில் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி காலை 9 மணி முதல் காலை 11 மணிவரையில் வேட்புமனுத்தாக்கல் கொழும்பு ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் முன்னெடுக்கப்பட்டது.

41பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் அதில் ஆறுபேர் தவிர்ந்த 35 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபஷ மற்றும் முன்னாள் அமைச்சர் குமார வெல்கம ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியபோதும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. வேட்புமனுக்களை தாக்கல் செய்த 35 பேரினதும் வேட்புமனுக்கள் அங்கீகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் ஐ.தே.க அடங்கலான கூட்டுக்கட்சிகள் சார்பில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடுவதோடு சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுகிறார்.

ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசானாயக்க தேசிய மக்கள் சக்தி வேட்பாளராக களமிறங்கியுள்ளதோடு முன்னாள் அமைச்சர்கள் எம்.பிகள், முன்னாள் இராணுவத்தளபதி உட்பட 35 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் கடும் போட்டி ஏற்படும் என தேர்தல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்த பின்னர் குறித்த நபருக்கு எச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியாக பதவியேற்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பதவிக்காலம், புதிய ஜனாதிபதியின் அறிவிப்போடு நிறைவடைந்தாலும் புதிய ஜனாதிபதி பதவி ஏற்கும் வரை அவரே நாட்டின் ஜனாதிபதியாக செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஏ.எம்.நிலாம், லக்ஷ்மி பரசுராமன்

Sat, 11/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை