விசேட தேவையுடையோரும் சமூகத்தின் முக்கிய பிரஜைகளே

மாதாந்த கொடுப்பனவு ரூ. 5000 ஆக அதிகரிப்பு

விஷேட தேவையுடையோர்களும் சமூகத்தின் முக்கிய பிரஜைகளே. அவர்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வாழ்வாதார உதவிகள் செய்ய வேண்டியது எமது கடமையாகும். அதன் மூலம் அவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதோடு, அவர்களும் சமூகத்தின் ஒரு அங்கமாக நாம் எம்மோடு இணைத்துக் கொள்ள வேண்டும்.

விஷேட தேவையுடையோருக்கு அரசாங்கம் இதுவரை வழங்கி வந்த மாதாந்தக் கொடுப்பனவு ரூபா 3000.00 இலிருந்து 5000.00 ரூபாவாக அதிகரித்துள்ளது. எனவே அரசின் இந்த உதவிகளைப் பெற்று தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்வை வளம்படுத்த வேண்டும் என்று அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தெரிவித்தார்.

விஷேட தேவையுடையோருக்கான மாதாந்த வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (27) பிரதேச செயலாளர் றஸ்ஸான் தலைமையில் இடம் பெற்றபோது நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச செலயக சமூக சேவைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில், பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.பாறூக், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எம்.எஸ்.எம்.ஹுஸைன், சமூக சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.தாஹிர், உளவள ஆலோசனை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஆப்தீன் உட்பட விஷேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு பெறவுள்ளவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவாக மாதாந்தம் ஐயாயிரம் (5000.00) ரூபா வழங்கப்படுவதோடு, கடந்த ஜுன் மாதம் தொடக்கம் ஒக்டோபர் வரையிலான ஐங்து மாதக் கொடுப்பனவான இருபத்தையாயிரம் (25,000.00) ரூபாவிற்கான கொடுப்பனவுப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவர்களுக்கான இம் மாதாந்தக் கொடுப்பனவு இவர்களது சொந்த வங்கிக் கணக்கில் மாதாந்தம் வைப்பிலிடப்படும். இவர்கள் வங்கி மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

முதற் கட்டமாக அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 167 விஷேட தேவையுடையோர்களுக்கு இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

(அக்கரைப்பற்று தினகரன் சுழற்சி நிருபர்)

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை