ஒரு தேசம் இன முரண்பாடுகளினால் முன்நோக்கிப் பயணிக்க முடியாது

இன மத முரண்பாடுகளினால் அடையாளப்படுத்தப்படும் ஒரு தேசம் ஒரு போதும் முன்நோக்கிப் பயணிக்க முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் காரியாலய திறப்பு விழாவும் நமது கனவு என்ற தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (4) பாலமுனையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எந்த ஒருநாடோ, தேசமோ இன, மத முரண்பாடுகளினால் ஒரு போதும் முன்நோக்கிப் பயணிக்க முடியாது. இலங்கையின் பிரிபடாத இறையாண்மையைப் பாதுகாத்து நாட்டின் பாதுகாப்பினை உறுதிசெய்து இனங்களின் பெயரால் மதங்களின் பெயரால் அடிப்படை வாதங்களையும் தீவிரவாதங்களையும் உள்நுழைவிக்கும் சக்திகளைத் துல்லியமாக இனங்கண்டு நீண்ட காலப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்திய சக்திமிக்க ஒரு தேசிய தலைமைத்துவத்தை உருவாக்குவதே எனது கனவின் நோக்கமாகும்.

இதனை கருத்தில் கொண்டு இலங்கையில் தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன். நான் வெல்லுவதற்காக இத்தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த தேர்தலின் ஊடாக எமது சமூகம் வெல்ல வேண்டும். எமது சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் இருப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். எமது நிருவாகம் பலப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காகத்தான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகம் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டது. பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டன, வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. எமது சமூகத்தின் பொருளாதாரம் அழிக்கப்பட்டதை நாம் மறந்து விடமுடியாது.

கடந்த பல தசாப்தங்களாக இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் மாறி மாறி வாக்களித்து வந்துள்ளோம்.

நமது சமூகத்தின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் காலம் முடிந்தவுடன் நமது சமூகத்தின் நிலை மறந்து அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை சீண்டியே அரசியல் நடத்தியே பழக்கப்பட்டு விட்டார்கள்.

எமக்கு நடந்தது என்ன கடந்த 2015ம் ஆண்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க முழு முஸ்லிம் சமூதாயமும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது முழு வாக்குகளையும் அள்ளி வழங்கி ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்தினோம்.

எந்த ஒப்பந்தமும் இன்றி எமது அரசியல் தலைமைகளின் கதைகளை நம்பியே நாம் அனைவரும் வாக்களித்தோம்.

இன்று எமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் எமது சமூகம் தொடர்பான எந்தவிதமான ஒப்பந்தங்களும் இன்றி கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது செய்த அதே தவறினை இப்போதும் செய்திருக்கின்றனர்.

இன்று வரிந்து கட்டிக்கொண்டு சஜித் பிரேமதாசவை ஆதரிக்க கழத்தில் குதித்திருக்கின்றனர். எமக்கு சஜிதும் ஒன்றுதான் கோட்டாபயவும் ஒன்றுதான்.

எமது முழு முஸ்லிம் அரசியல் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசின் பக்கம் இருந்தும் எமது முஸ்லிம் சமூகத்தின் அபகரிக்கப்பட்டுள்ள ஒரு இஞ்சி நிலத்தையேனும் எமது சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

எமது சகோதர இன சமூக அரசியல் தலைமைகள் சென்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சியில் இருந்து கொண்டே ஒப்பந்தங்கள் செய்து தமது சமூகத்தின் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருகின்றனர்.

எமது முஸ்லிம் சமூகம் தோட்ட வேலைக்கு செல்ல முடியாது. வெளியிடங்களுக்குச் சென்று சந்தைகளில் வியாபாரம் செய்ய முடியாது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்றும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

வேளாண்மையை விதைக்கின்ற காலத்தில் விதைக்காமல் அறுவடை செய்கின்ற காலத்தில் நெல்லை விதைப்பது போன்ற செயற்பாட்டில் சகோதரர் ரவூப் ஹக்கீமும், றிஷாட் பதியுதீனின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

எமது சமூகத்தின் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்ற சந்தர்ப்பத்தில் கோட்டாபயவோ அல்லது சஜித்தோ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் எமது சமூகத்தின் வாக்குகள் அவசியம் தேவை. எமது சமூகத்தின் பிரச்சினைகளை பேசாது எழுத்து மூலமான எந்த ஒப்பந்தமும் இன்றி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் செய்த அதே தவறை இந்த தேர்தலிலும் செய்திருக்கின்றனர் என்றார்.

(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)

Wed, 11/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை