ஈராக் ஆர்ப்பாட்ட தளங்களை அகற்ற முயற்சி: பலரும் பலி

ஈராக் தலைநகர் பக்தாத் மற்றும் பஸ்ராவில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதோடு பல ஆர்ப்பாட்டக்காரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

பக்தாதின் மையப் பகுதியில் இருக்கும் டைக்ரிஸ் நதிக்கு மேலான மூன்று பாலங்களை ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து மீட்பதற்கு பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர்.

தொடர்ந்து ஆட்சி மாற்றத்தை கோரி தலைநகரின் தஹ்ரிர் சதுக்கத்தில் நிலைகொண்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களையும் கலைப்பதற்கு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதோடு நான்காமவர் கண்ணீர் புகைக்குண்டு குப்பி தலையை துளைத்து கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவமனை மற்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். “பாதுகாப்பு படையினர் எம்மை நெருங்கி வந்தார்கள் ஆனால் டயர்களை கொளுத்தி அவர்களை தடுப்பதற்கு நாம் முயன்றோம்” என்று தஹ்ரிரில் உள்ள மருத்துவர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

மறுபுறம் தெற்கு நகரான பஸ்ராவில் இடம்பெற்ற வன்முறைகளில் மேலும் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டு டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இதன்போது அங்குள்ள மாகாண அரச தலைமையகத்திற்கு முன்னால் இருந்த ஆர்ப்பாட்ட முகாமினை பாதுகாப்பு படையினர் அகற்றியுள்ளனர். வேலையின்மை, ஊழல் மற்றும் மோசமான அரச சேவைகளுக்கு எதிராக கடந்த ஒக்டோபரில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இதுவரை 260க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த உயிரிழப்புப் பற்றி அரசு எண்ணிக்கையை வெளியிடுவதை நிறுத்திய நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எண்ணெய் வளம் கொண்ட ஈராக் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாகவும் உள்ளது. எனினும் அங்கு ஐந்தில் ஒருவர் வறுமையில் வாடுவதோடு இளைஞர்கள் இடையே வேலையின்மை 25 வீதமாக இருப்பதாக உலக வங்கி குறிப்பிடுகிறது. இந்நிலையில் அரசுக்கு எதிராக முதலாவது ஆர்ப்பாட்ட அலை கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில் பொருளாதார சீர்திருத்தங்கள் அரசியலமைப்பு திருத்தங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

Mon, 11/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக