சகல மக்களுக்கும் பாதுகாப்பை தரக்கூடிய ஆட்சியை அமைப்போம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ

மத வேறுபாடின்றி நாட்டின் சகல மக்களுக்கும் சமமான பாதுகாப்பை தரக்கூடிய ஆட்சி ஒன்றை அமைப்போம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தர்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து மருதமுனையில் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (12) நடைபெற்ற போது இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணத்திலுள்ள காபட் வீதிகள் உட்பட அபிவிருத்திகளை மஹிந்த அரசாங்கம்தான் செய்தது. விவசாயம், மீன்பிடி, கால்நடை போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளோம்.

தாய்மார் தமது நகைகளை அடகுவைத்து கற்பித்து பட்டங்களை பூர்த்திசெய்த 54 ஆயிரம் பட்டதாரிகள் இன்று வீதியில் நிற்கிறார்கள். இவர்களை நாம் அரச சேவையில் இணைத்துக் கொள்வோம். மருதமுனை பிரதேசத்தின் நெசவுக் கைத்தொழிலை சர்வதேச அங்கிகாரம் பெறும் அளவிற்கு அபிவிருத்தியடையச் செய்வோம்.

இன்று மீன்பிடிக்க, விவசாயம் செய்ய, வியாபாரம் செய்ய எங்குமே செல்ல முடியாத நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை. நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து பெற்றுக்கொடுத்த சுதந்திரம் அழிவடைந்துள்ளது. நீங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து உருவாக்கிய ஜனாதிபதிக்கு நாட்டை பாதுகாக்க முடியாமல் போனதை நாம் எல்லோரும் நன்கு அறிந்துள்ளோம்.

யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவர்களால் மாத்திரம்தான் நாட்டை பாதுகாக்க முடியும்.

இலங்கை வாழ் சகல மக்களினதும் பாதுகாப்பை எமது பொறுப்பாக ஏற்றுக்கொண்டு பாதுகாப்போம் என்றார்.

 

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

Fri, 11/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை