பல கிராமங்களின் இருப்பு கேள்விக்குறி; மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பு

 

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பின் காரணமாக மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல கரையோரக் கிராமங்களின் இருப்புக்கள் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது இப்பிரதேசங்களில் காற்றுடன் கூடிய கடும் மழையும் இடையிடையே பெய்துவருவதினால் முன்னரை விட கடல் அரிப்பின் வேகம் அதிகரிதுள்ளது.

கடந்த சில நாட்களாக மீனவர்களது வாழ்வாதரமும் பாதிக்கப்ட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பாணமை வரையயிலான 95 கிலோமீற்றருக்குட்பட்ட கடலோர கரையேராப் பிரதேசங்கள் கடல் அரிப்பினால் கடல் விழுங்கும் கிராமங்களாக மாறியுள்ளன.

கடந்த 2004 இல் ஏற்பட்ட கடற்கோள் அனர்த்தத்தின் பின்னர் இங்குள்ள கடலோரப் பிரதேசங்கள் பாரிய கடலரிப்பிற்குள்ளாகி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் பெரியநீலாவணை, கல்முனை, நிந்தவூர், ஒலுவில், திருக்கோவில், பொத்துவில் உல்லை ஆகிய பிரதேசங்கள் கடல் அரிப்பினால் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மீனவர்களது மீன்வாடிகள், மீனவகட்டிடங்கள், மீனவர் குடியிருப்பு மனைகள் ஆகியன கடல் அரிப்பினால் மீன்பிடி உபகரணங்களை வீதியின் ஓரத்திலே நிறுத்தி வைக்கவேண்டிய அவலநிலை மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 4500 இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் விசிக்கின்றன. கடல் அரிப்பினால் தென்னை மரங்கள் கடலுக்கு இரையாகிவருகின்றன. இதனால் அம்பாறை மாவட்டத்தில் தெங்குச் செய்கையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்பே வேகமாக கடல் அரிப்பு இடம்பெறுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இம் மாவட்டத்தில் ஏற்படும் கடல் அரிப்பினால் கடற்கரையோரங்களிலுள்ள கிராமங்கள் பல தமது நிலப்பகுதியை இழந்து வருகின்றன.

திருக்கோவில் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் எதிர்காலத்தில் கடலினால் காவு கொள்ளப்படும் அபாயம் நிலவுவதாகவும் கடல் அரிப்பினை கட்டுப்படுத்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஈடுபடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

மெல்லக் கொல்லும் பாரிய கடலரிப்பு; கொதித்தெழும் கிராம வாசிகள்பாண்டிருப்பு தினகரன் நிருபர்

திருக்கோவில் மீனவ சங்கத்தலைவர் தயாநேசன் இப்படிக்கூறினார்.

'கடல நம்பித்தான் எங்கட சீவியம் போகுது. எங்களுக்கு வாழ்வுதாற கடலே எங்கல அழிக்குது. சுனாமியில பாதிக்கப்பட்டிருந்தோம். இப்ப கடலரிப்பு எங்கட வாழ்க்கையை பாழாக்குது. 500 பேர் இந்தக் கடலிலதான் மீன் பிடிச்சி வாழுறம்.

இந்த இடத்தவிட்டுட்டு வேற இடத்துக்கும்போக ஏலாது. இந்தக் கடலரிப்ப தடுக்கிறத்துக்கு நடவடிக்க எடுங்க' என்றார்.

இளைஞன் டிலக்சன் கூறுகையில், 'போன கிழமை கூட ஒரு சவம் வந்து கிடந்தது. நாங்கதான் இழுத்துப்புதைச்சம் இந்தக் கடலரிப்பால எங்கட சவக்காலையும் கடலுக்குள்ள போய்ச்சி இப்ப கொஞ்ச இடம்தான் இருக்குது. இதால கடல்ல எலும்புகளும் மிதக்குது. சுற்றுப்புறச் சூழலும் பழுதாகப்போகுது' என்றார் .

திருக்கோவில் மயானத்தில் இறந்தவர்கள் நினைவாக கட்டப்பட்டுள்ள கல்லறைகள் கடலுக்குள் புதையுண்டுள்ளன. மிகுதியாகவுள்ள கல்லறைகளும் மயானமும் கடலரிப்பினால் அழிவடைகின்றது. கடலில் சடலங்களின் உக்கிய எலும்புகளின் எச்சங்களும் மிதப்பதினால் பல்வேறு தொற்று நோய்களுக்கும் இம்மக்கள் ஆளாகிவருகின்றனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த கடலரிப்பிற்கு தடுப்பு சுவர்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

திருக்கோவில் மக்களின் வாழ்விடத்தை மெல்லக் கொல்லும் பாரிய கடலரிப்பை தடுக்க மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை