பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் நோக்கத்தை ஐ.நாவிடம் அறிவித்தது அமெரிக்கா

பாரிஸ் பருவநிலை உடன்படிக்கையில் இருந்து விலகிக் கொள்ளும் நடைமுறையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் ஏமாற்றம் மற்றும் கவலையை வெளியிட்டுள்ளன.

இந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் நோக்கத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் சபையிடம் கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இந்த அறிவித்தலை அடுத்து உலக பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் ஓர் ஆண்டு நடைமுறை ஆரம்பிக்கப்படுகிறது. இந்தக் காலம் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு மறுநாள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் இந்த உடன்படிக்கை 188 நாடுகளை ஒன்றிணைத்ததாக எட்டப்பட்டது.

பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இதற்கு அமெரிக்காவும் ஒப்புக் கொண்டது.

ஆனால், தற்போதைய ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அமெரிக்காவை பொருளாதார ரீதியாக பின் தள்ள மேற்கொள்ளப்படும் சர்வதேச சதி என இதை விமர்சித்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போதும், தாம் ஆட்சிக்கு வந்தால், பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்று உறுதி அளித்தார்.

பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்துமென சர்வதேச மற்றும் ஐரோப்பிய விவகார மையம் கடந்த டிசம்பர் 2018இல் எச்சரித்திருந்தது.

பிற நாடுகளும் அமெரிக்காவை பின்பற்றலாம் என்றும் அந்த மையம் கூறி இருந்தது.

துருக்கி மற்றும் ரஷ்யா பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், ஒப்பந்தப்படி செயல்படவில்லை என்றும் அந்த மையம் குறிப்பிட்டிருந்தது.

பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் பருவநிலை மாற்றம் தொடர்பான, உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கையெழுத்தானது.

தொழிற் புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக இரண்டு டிகிரி உலக வெப்பமயமாதலைக் குறைப்பதை இது இலக்காகக் கொண்டுள்ளது.

எரியாற்றல் உற்பத்தி, போக்குவரத்து, விவசாயம், குடியேற்றம் ஆகியவற்றிற்காக காடுகளை அழிப்பதால் மனிதர்கள் வெளியேற்றக்கூடிய பசுங்குடில் வாயுக்களால் முக்கியமாக பூமியின் வெப்பம் அதிகரிப்பதாக பருவநிலை அறிவியல் குற்றம் சாட்டுகிறது.

பலத்த புயல்கள், வறட்சிகள் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்தல் உள்பட ஆபத்தான பருவநிலை மாற்றங்களை தவிர்ப்பதற்கு இந்த இலக்கு முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எதிர்பாராத விதமாக அதிக மாசு வெளியேற்ற நாடுகளான சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இதனை ஏற்றுகொண்டதால், கட்டாயமாக தேவைப்படுகின்ற அளவை எட்டிய இந்த ஒப்பந்தம் செயல்பட ஆரம்பித்தது.

சர்வதேச அளவிலான கார்பன் வெளியேற்றத்தில் அமெரிக்காவின் பங்கு 15 வீதமாகும்.

Wed, 11/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை