இனரீதியாக அவமதிப்பு: ஜொப்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோரியது நியூஸிலாந்து

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சரை பார்வையாளர் ஒருவர் இன ரீதியாக அவமதித்த சம்பவத்திற்காக, நியூஸிலாந்து கிரிக்கெட் சபை மன்னிப்பு கோரியுள்ளது.

மௌண்ட் மவுன்கானியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி நாள் போட்டியில் இங்கிலாந்து அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது. இதன்போது களமிறங்கி துடுப்பெடுத்தாடிய ஜொப்ரா ஆர்ச்சர் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்போது பார்வையாளர் ஒருவர் தன்னை நிறத்தை குறிப்பிட்டு வசைபாடியதாக ஜோப்ரா ஆர்ச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து அவர் குறிப்பிட்டிருந்தாவது, ‘எனது அணியை காப்பாற்ற துடுப்பெடுத்தாடி போராடி விட்டு ஆட்டம் இழந்து வெளியேறுகையில் எனக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் இனரீதியான விமர்சனத்தை எதிர்கொண்டேன்.

அந்த ஒருவரை தவிர இரசிகர்கள் அனைவரும் அருமையாக நடந்து கொண்டனர். வழக்கம் போல இங்கிலாந்து இரசிகர்கள் நல்ல ஊக்கம் அளித்தனர்’ என்று தெரிவித்து இருந்தார்.

ஜொப்ரா ஆர்ச்சர் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், குறித்த சம்பவத்துக்காக நியூஸிலாந்து கிரிக்கெட் சபை மன்னிப்பு கோரியுள்ளது.

இதுகுறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதல் டெஸ்ட் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சரை இரசிகர் ஒருவர் வார்த்தையால் அவமரியாதை செய்ததாக எழுந்துள்ள புகார் எங்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட்டில் எங்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனாலும் அவர்கள் எங்களது நண்பர்கள்.

இனரீதியான அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்காக ஜொப்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோருகிறோம். நியூஸிலாந்து கிரிக்கெட் சபை, ஜொப்ரா ஆர்ச்சரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்கும்.

இந்த குற்றத்தை செய்த ரசிகர் மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேறி விட்டதால் அவர் யார்? என்பதை பாதுகாவலர்களால் கண்டறிய முடியவில்லை. நியூசிலாந்து கிரிக்கெட் சபை, விளையாட்டரங்கில் உள்ள கண்காணிப்பு கெமராவின் பதிவுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும். மைதானங்களில் அவமரியாதையான மற்றும் மோசமான வார்த்தையில் திட்டுவதை துளியும் அனுமதிக்க முடியாது. இந்த விசாரணையின் முன்னேற்றம் குறித்து பொலிஸிற்கு தகவல் தெரிவிக்கப்படும். ஜொப்ரா ஆர்ச்சருக்கு ஏற்பட்ட அனுபவம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

ஹமில்டனில் நடைபெறும் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்த விவகாரத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயற்படுவோம் என்று உறுதி அளிக்கிறோம்’ கூறப்பட்டுள்ளது.

ஹமில்டனில் நடைபெறவுள்ள அடுத்தப் போட்டியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, கண்காணிப்பினை அதிகப்படுத்தியுள்ளதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து தேசிய அணியில் விளையாடி வரும் ஜொப்ரா ஆர்ச்சர், பார்படோஸை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டினை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை