தடை விதிக்கப்பட்ட நிகோலஸ் பூரானுக்கு ஸ்டீவ் ஸ்மித் ஆதரவு

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் போட்டித் தடையினை எதிர்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரரான நிகோலஸ் பூரானுக்கு, அவுஸ்திரேலியாவின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் ஆதரவு வழங்கியுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி லக்னோவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, நிகோலஸ் பூரான், தனது கட்டை விரல் மூலம் பந்தினை சேதப்படுத்தியது போட்டிக் காணொளியில் பதிவாகியது.

இந்தக் காணொளியை ஆதாரமாக கொண்டு நிகோலஸ் பூரான் குற்றவாளியாக இனம் காணப்பட்டு அவருக்கு அடுத்த நான்கு ரி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்த பூரான், இந்தியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின், முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பினையும் இழக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் சபை, நிகோலஸ் பூரானின் குற்றத்தினை மூன்றாம் நிலைக் குற்றமாக வகைப்படுத்தி அதற்காக ஐந்து தகுதி இழப்பு புள்ளிகளையும் அவருக்கு வழங்கியிருக்கின்றது.

தான் செய்த தவறு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த நிகோலஸ் பூரான் அதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கோரியிருக்கின்றார்.

இந்த நிலையில் நிகோலஸ் பூரானின் செயற்பாடு குறித்து ஸ்டீவ் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

”ஒவ்வொருவரும் மாறுபட்டவர்கள். அதேபோல் ஒவ்வொரு கிரிக்கெட் சபையும் மாறுபட்டது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை அவரவர் வழிகளில் கையாள்வார்கள். என்னைப் பொறுத்த வரைக்கும், முகத்தில் அறையப்பட்டு அதை எதிர்கொண்டேன்.

எனக்கு நிக்கோலஸ் பற்றி தெரியும். அவருடன் சிறிய காலம் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அவர் திறமையான வீரர். அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அவர் தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அதில் இருந்து கடந்து செல்வார் என நினைக்கிறேன். நான் இந்த விடயத்தை கடினமாக உணர்ந்ததில்லை. நான் கடந்த காலத்தில் இருந்து விலகி வந்துவிட்டேன். தற்போது வரவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் மீது கவனம் செலுத்துகிறேன். கரிபீயன் பிரிமீயர் லீக்கில் பூரானுடன் விளையாடியுள்ளேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர் ஒரு தலைசிறந்த வீரராக இருக்கப்போகிறார் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

கேப்டவுணில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது, ஸ்டீவ் ஸ்மித், பந்தை சேதப்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தார் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா அவருக்கு ஓராண்டு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 11/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை