பெருந்தோட்ட தொழிலாளர்களின் வருமானம், சமூக அந்தஸ்தை அதிகரிக்க வேண்டும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை மட்டும் அதிகரிப்பது இக்காலக் கட்டத்தில் சாலச்சிறந்தது அல்ல. வருமானத்தை அதிகரிப்பதுடன் அவர்களின் சமூக அந்தஸ்தையும் அதிகரிக்க வேண்டும் என பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட தோட்ட தலைவர்களை சந்திக்கும் நிகழ்வொன்று இரத்தினபுரி மாநகர சபை மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் கேரிக்கைக்கமைய மலையக தோட்ட தொழிலாளர்களின் வருமானத்தை குறுகிய மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தினை அமுல்படுத்துவதன் மூலம் அதிகரிக்கப்படும் இதன் முதற்கட்டமாக இலங்கை தேயிலைக்கு உலக சந்தையில் சிறந்த கேள்வியையும் உயர்ந்த விலையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிராம மக்கள் அனுபவிக்கும் அனைத்து அடிப்படை வசதிகளையும் தோட்ட மக்களும் பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக தோட்ட பாடசாலைகளின் வளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். தோட்டங்களுக்கான வீதிகள், குடிநீர் வசதிகள், பெற்றுக்கொடுக்க வேண்டும். இதனை விட இம்மக்களின் சிறந்த சூழலையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் என்றும் இரண்டாந்தரப் பிரஜைகள் இல்லை என்பதனை இங்கு சுட்டிகாட்டுகின்றேன்.

நாட்டில் ஒரு இனத்திற்கு மட்டும் அல்லது ஒரு பிரதேசத்திற்கு மட்டும் தனியான அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாது.

அனைத்து பகுதிகளுக்கும் ஒரே முறையான அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அனைத்து பகுதிகளுக்கும் ஒரே வகையான கல்வி முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு நீண்ட கால,குறுகிய கால திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.கிராமிய மற்றும் தோட்டப் பாடசாலைகளுக்கிடையே வேறுபாடுகள் இருக்க முடியாது அதனை நாம் அனுமதிக்கப் போவதில்லை.

இரத்தினபுரி தினகரன் நிருபர்

 

Sat, 11/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை